நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குச் சாவடிக்குள் விஷாலும் , சரத்குமாரும் சென்ற போது நடந்த தள்ளுமுள்ளில் விஷால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
விஷால் தரப்பினர் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயற்சித்ததாகவும், அதைத் தடுக்க நடந்த முயற்சியில் வாக்குவாதம் வந்து சண்டையாக மாறியதாகவும் சரத்குமார் தரப்பில் கூறப்படுகிறது. சரத்குமார் பேட்டியளித்தபோது ‘விஷால் உட்பட யாரையும் நாங்கள் தாக்கவில்லை’ என்று கூறினார்.
தாக்கப்பட்ட விஷாலுக்கு போலீசார் வேனுக்குள் முதலுதவி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. வாக்குச் சாவடிக்கு வெளியே வந்த விஷால் தேர்தல் தொடர்ந்து நடந்து முடியவேண்டும் என்றும், அதன் பின்னர் இந்தப் பிரச்சனைகளை பேசிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
3140 பேர் வாக்காளர்களாக உள்ள இந்தத் தேர்தலில் இதுவரை 2500 பேருக்கு மேல் வாக்களித்துள்ளனர். இரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிடும்.
இவ்வளவு பிரச்சனைக்கும் அடிப்படைக் காரணம் என்ன? தி.நகரில் உள்ள நடிகர் சங்க இடம் 300 கோடி ரூபாய் மதிப்புடையது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட சத்யம் குழுமம் சல்லிசாக சில கோடி ரூபாய்கள் நடிகர் சங்கத்துடன் காண்ட்ராக்ட் போட்டுக் கொண்டது. அதில் முன்னூறு கோடி ருபாய் செலவு செய்து கட்டப்படும் வளாகத்தை 30 ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு, அதற்குப் பின் வேண்டுமென்றால் நீட்டிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது நடிகர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மேல் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டதே இந்தப் பிரச்சனைகளுக்கு மூல காரணம்.