இலங்கை ராணுவம் 2009ல் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றபோது ஒன்றுமே நடக்காததுபோல ஊமைக் கண்ணீர் விட்டு, ‘மழை விட்டும் தூறல் விடவில்லை’ என்று போர் நிறுத்தம் அறிவித்தும் குண்டுவீசித் தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசைப் பாதுகாத்த தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்” என்பது முதுமொழி! ஆனால் இலங்கை அரசின் புளுகு அதற்குள் வெளி வந்து விட்டது. இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, இலங்கை ராணுவம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான். இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை ஏற்கத்தக்கதே என்று இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவே தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில், எண்ணற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களில், ராணுவத்தினர் ஈடுபட்டதாக, ஐ.நா., மனித உரிமை கமிஷன் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக, வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட குழு, விசாரணை நடத்த வேண்டுமென, ஐ.நா., ஏற்கனவே பரிந்துரைத்த போதிலும், போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை உள்நாட்டு குழு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த மாதம், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஐ.நா., சபையில் நிறைவேறியது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே பதவிக் காலத்தில் நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா தலைமையிலான விசாரணைக்குழு, சமர்ப்பித்துள்ள, 178 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “இலங்கையில், உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தில், ராணுவம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நம்பத்தக்கவை; சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டால், ராணுவ வீரர்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டது நிரூபணம் ஆகலாம். இக்குற்றங்களை விசாரிக்க, இலங்கை சட்ட முறைக்கு உட்பட்ட, போர் குற்ற பிரிவை அமைக்க வேண்டும். கடைசி கட்டத்தில் பிடிபட்ட தமிழ் போர்க்கைதிகளை, ராணுவ வீரர்கள் கொலை செய்ததை காட்டும், ‘சேனல் 4’ன் வீடியோ காட்சிகள் உண்மையானவை தான். சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும், தலைவர்களையும், படுகொலை செய்த சம்பவங்கள் குறித்து, தனி நீதிபதி விசாரிக்க வேண்டும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். போர்க்குற்ற புகார்கள் குறித்த விசாரணையில், சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற, ஐ.நா., பரிந்துரை ஏற்கத் தக்கது.” இவ்வாறு, மேக்ஸ்வெல் பரனகமா சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, நேற்று முன்தினம், இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த அறிக்கையில், “இலங்கை ராணுவம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான். இலங்கை இறுதி யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை மட்டுமின்றி 37 ஆண்டு கால போரின் போது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மூத்த ராணுவ தளபதிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மையானவை. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் உண்மையானவை. இலங்கை நீதித் துறையில் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப் பிரிவு அமைக்க வேண்டும்.
வெள்ளைக் கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித் தேவன் உள்ளிட்டோர் சரணடைந்த போது அவர்களைச் சுட்டு படுகொலை செய்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு காணாமல் போனோர் குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும்” என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த இலங்கை அரசின் அதிபர், அதற்கு அடுத்த நாளே, அந்தத் தீர்மானத்திற்கு எதிரான கருத்தினை வெளியிட்டது பற்றி நான் 5-10-2015 அன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இலங்கை அரசின் முரண்பட்ட நடவடிக்கைகளையெல்லாம் பட்டியலிட்டு, இந்திய அரசும் உலக அரசுகளும் இனியாவது இலங்கை அரசின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டுமென்றும்,இந்திய அரசே சர்வ தேச விசாரணைக்குத் தீர்மானம் கொண்டு வரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.
சுதந்திரமான விசாரணை : இதற்கெல்லாம் மேலாக தற்போது இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட குழுவே திட்டவட்டமாக அறிக்கை கொடுத்து, அந்த அறிக்கையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்திய அரசு இனியும் இலங்கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்டிருக்காமல், இலங்கை ராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப் படுகொலைகள்குறித்து சர்வ தேச, நம்பகமான, சுதந்திரமான விசாரணையை நடத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அந்த விசாரணையை இலங்கையிலே நடத்தாமல், உலக நாடுகளின் பொதுவான இடத்திலே வைத்து நடத்தினால்தான் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப தன்னுடைய நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே இந்திய மத்திய அரசு உடனடியாக அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கெட்டிக்காரர் ஐயா நீங்க !