விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் நலன் குமரசாமி கூறுகையில், “‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். எனது முதல் படமான ‘சூது கவ்வும்’ படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து பண்ணியிருக்கிறேன். குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
தாதாவின் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ‘ப்ரேமம்’ படத்தில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனாவை நாயகியாக இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை “என்னய்யா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறா” என்று விஜய் சேதுபதி பாராட்டினார். போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே. சுவராசியமான முறையில் நட்பு கொள்ளும் இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி எல்லாம் கிடையாது.’ இப்படம் ஒரு கொரியன் திரைப்படத்தின் ரீமேக்காகும். அப்படத்தை அப்படியே எடுத்திருக்கிறேன், ஆனால் அதில் என்னோட பாணி இருக்கும்.
‘காதலும் கடந்து போகும்’ படத்தின் கதை ஒன்றரை வருடத்திற்கு முன்பே தயார் தான். ஆனால், வேறு ஒரு கதை பண்ணலாம் என்று ஆரம்பித்து, அது சரியாக வரவில்லை என்றவுடன் ஒரம் வைத்துவிட்டு மீண்டும் பழைய படத்தையே கையில் எடுத்தோம்.
இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்றார் நலன்.
சரிதானே. காதல் என்று ரொம்ப உருகுமளவிற்கு இந்தக் காலத்தில் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் பெரும் பொருட்டாகத் தெரிவதில்லை. ‘சரிதான் போ நீ இல்லாட்டி அடுத்த ஆளு’ என்பதாகத் தான் இருவரின் மனப் போக்குகளும் சுயநலம் நிரம்பி வழிகிறது. அதனால் காதலுக்காக இங்கு யாரும் முன்பு போல உருகுவதில்லை என்கிற யதார்த’தமே திரையில் விரிகிறது.