enigma-music-prabahar-20apr12

உலகத்திலேயே பிற நாட்டு இசை பற்றிய புழக்கம் குறைவாக உள்ள பிரதேசம் தமிழகம் என்பேன். இவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்த பின்னும் சினிமா இசை தவிர வேறு இசைவகைகளைப் பற்றி தமிழர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. இப்போதைய இளைய தலைமுறையையும் சேர்த்துத்தான். அதற்கு இரண்டு காரணங்களை என்னால் ஊகிக்கமுடிகிறது.

ஒன்று, தமிழ் சினிமா இசையில், உலகத்தில் உள்ள எல்லா பண்பாடுகளின் இசை அம்சங்களும் காணப்படுகிறது. (பிச்சைகாரனின் தட்டைப்போல) ஏனென்றால் தமிழ் இசையமைப்பாளர்கள் உலகின் அத்தனை விதமான இசைவகைகளையும் தழுவியோ, திருடியோ, ‘எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர்’ என்பதற்கிணங்க கொண்டுவந்து சேர்த்து விடுகிறார்கள்.

இரண்டாவது, இந்த இளையராஜா, அவர் செயலாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்களை எந்தப்பக்கமும் திரும்பவிடாமல் தன்னுடைய ஹார்மொனியப் பெட்டியில் ஒரு 15வருஷங்கள் செருகி வைத்திருந்தார். வருஷத்திற்கு 10லிருந்து 35 படங்கள் என்று கொண்டால் வருஷத்திற்கு 50லிருந்து 125 பாடல்கள். அவற்றைக் கேட்டுக்கேட்டு கிறங்கி கிடந்தே தமிழர்கள் காலத்தைக் கழித்துவிட்டார்கள். விட்டார்கள் என்ன கழித்து விட்டோம். ராஜா கிறுக்குத்தெளிய எனக்கும் நீண்டகாலம் தேவைப்பட்டது.

மேற்கத்திய பாப், ராக் (Pop & Rock) இசை வகைகள் ஒரு புறம். அதன் மறுபக்கத்தில் மொசார்ட், பீத்தோவன் என்ற செவ்வியல் (Classical) இசை. இவையல்லாமல் ‘உலக இசை’ (World Music) என்ற வகைமையில் புதிய இசைவகை ஒன்று உருவானது. மேற்கத்திய இசையின் கூறுகளை, ஐரோப்பா அல்லாத ஆசிய, ஆப்பிரிக்க பாரம்பரிய, நாட்டுப்புற இசைக்கூறுகள், மந்திரங்கள் போன்றவற்றை இணைத்து உருவான இசையே அது. அது பெரும்பாலும் மேற்கத்திய அரேஞ்ச்மண்ட் (Arrangement) எனப்படும் இசைச் சோடனையையும், மேலே குறிப்பிட்ட நாடுகளின் மரபான கூறுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த உலக இசை.

1980களில் ஒலிப்பதிவு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, கணினி சார்ந்த ஒலிப்பதிவு (digital recording), ஒலிக்கலவை (mixing), பல வழித்தடங்களில் ஒலிப்பதிவு (multitrack recording) செய்ய முடியுமான வசதி ஒரு புதுவகையான இசையை ஊக்குவித்தது. அது இசைச் சந்தையில் world music (உலக இசை) என வழங்கப்பட்டது.

இவ்வகையில் 1980களில் மேற்கத்தைய இசையுலகில் புதிய வகையிலான இசை வகைகள் தோன்றலாயின. World music, world beat, world fusion என்பனவே அவை. வேறு சில பகுதிகளில் Ethno Pop, Afro Pop, Afro Beat எனவும் இதே இசை வகைகள் வேறு சில பகுதிகளில் Tribal, Techno – Tribal, Cyber Tribal, Trance, New Age, World Ambient, Ethnic Fusion, Ethno Techno, Ethno – Punk, Ethno Tribal என்றும் வழங்கப்பட்டன.

அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஒரு இசைவகை அல்லது இசைத்தொகுப்பு எனிக்மா (Enigma). எனிக்மா என்ற பெயரில் முதல் இசைத் தொகுப்பு வெளிவந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னவென்று தெரியாமலேயே இந்த தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கமுடியும். அல்லது இதன் போலி செய்யப்பட்ட இசையை, தமிழ் சினிமா பாடல்களிலும் கூட கேட்டிருக்கலாம்.

1957ல் ருமேனியாவின் தலைநகர் புகாரஸ்ட்டில் பிறந்த மிக்கேல் கிரேட்டு (Michael Cretu ) இளம் வயதிலேயே இசை கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பாரிஸ், ப்ராங்ஃபர்ட் நகரங்களிலும் தொடர்ந்த அவருடைய இசைக்கல்வி 1978ல் ஒரு இசைப் பட்டத்தோடு நின்றது. வெகுவிரைவிலேயே மரபான இசை தனக்கானதல்ல என்று உணர்ந்து கொண்டபோது, அவருக்குள் ஒரு புதிய இசைக்கான தேடல் தொடங்கியது. அவருடைய இசைத்தோழர்கள் டேவிட் ஃபேர்ஸ்டெய்ன் (David Feinstein) மற்றும் ஃப்ராங் பீட்டர்சன் (Frank Peterson)இருவருடனும் தொடர்ந்து உரையாடியதன் விளைவாக 1990ல் Sadeness எனும் தனிப்பாடலை (single ) வெளியிட்டார். அது 20நாடுகளில் விற்பனை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

எனிக்மாவை ஒரு இசைத்தொகுப்பு என்றழைப்பதற்குப் பதிலாக அதை ஒரு எலெக்ட்ரானிக் இசைத் திட்டம் (electronic musical project ) என்று அழைத்தார் டேவிட். 90% எலெக்ரானிக் இசைக்கருவிகள், சாதனங்கள் கொண்டு உருவாக்கப்படட்து இந்த ஆல்பம். எலெக்ட்ரானிக் இசைக்கருவிகள் கொண்டு உருவாக்கப்படும் இசை இரைச்சலாகத்தான் இருக்கமுடியும், அது இனிமையாக இருக்காது என்பது போன்ற கருத்துக்கள் பொதுவாக உலவுபவை. மதுபானக் கூடங்களில் ஒலிக்கும் டெக்னோ (techno) அல்லது கிளப் இசை (club music) போன்றவை இந்த வகையானவை. உள்ளே நுழைந்தவுடன் ‘திக்கும்.. திக்கும் ‘ என்று நெஞ்சைத் தாக்குகிறenigma-album-poster பேஸ் கித்தாரின் அதிர்வுடன் ஒலிக்கும் அவ்விசை முழுக்க எலெக்ட்ரானிக் இசைதான். ’இசை என்பது கருவிகளில் இல்லை. அது வாசிப்பவனிடத்தில்தான் இருக்கிறது’ என்றொரு வாசகம் உண்டு. வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புல்லாங்குழல் ஒரு மூங்கில் குச்சிதானே. யார் கையில் என்ன இருக்கிறது என்பதுதானே விசயம். டேவிட், எலெக்ரானிக் சாதனங்களின் புதிய சாத்தியங்களைக் கொண்டு, இசையை யாரும் எதிர்பாராத தளத்திற்கு கொண்டு சென்றார்.

பாப், ராக் இசையில் கேட்டுப் பழகிய ஒலிகளிலிருந்து மாறுபட்ட புதிய ஒலிகளால் ஒரு புதிய இசைப் பயணத்தை முயற்சித்தது எனிக்மா. ஒரே நேரத்தில், பூவுலகிலிருந்து வேற்று கிரகங்களை நோக்கி நம்மை மிதக்கச் செய்வது போலவும் அதே நேரத்தில் நம்மை உள்நோக்கி அழைத்துச் செல்வதான ஆன்மிகப் பயணமாகவும் மாற்றுகிற விந்தையை அது நிகழ்த்தியது. நம்முடைய திரைப்பட பாடல்களில் பல நேரங்களில் வார்த்தைகள் பெரும் தொல்லைகளாக மாறிவிடுவதுண்டு. பெரும்பாலும். மேலும் நம் தமிழ் பண்பாட்டில் இசையை வார்த்தைகளற்று உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஒருபோதும் இல்லை. அதனால் வார்த்தைச் சருகுகள் இல்லாமலாகிவிட்ட புல்வெளியில் சப்தமற்று நடந்து போய்க்கொண்டே இருப்பதாக தோற்றம் கொள்கிறது. நேரடித்தன்மையற்ற எலக்ரானிக் ஒலிகள் ஆழமான உள் உணர்வுகளைச் கிளர்ந்தெழச்செய்கின்றன. மரபான கிரிகோரிய மந்திரங்களும், பேன் ப்ளூட்டின் காற்று நீங்கிவிடாத ஒலியும் தீராத ரகசியத்தை கிசுகிசுக்கின்றன. ஒரு இசையைப் பற்றி வார்த்தைகளில் வர்ணிக்க முயலுவதான அபத்தத்தை நான் நிறுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.

கிரிகோரியன் மந்திரங்கள், பேன் ப்ளூட், இந்தோனேசிய பாரம்பரிய இசையின் கூறுகளையும் கொண்ட முதல் தொகுப்பு 1994ல் MCMXC a.D. வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பாக 1993ல் The Cross Of Changes வெளிவந்தது. ஒரே வருட்த்தில் 6 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்த்தது.1996ல் The King Is Dead. Long live King எனும் மூன்றாவது தொகுப்பு வெளியானது. இதிலும் கிரிகோரிய மந்திரங்களும், சமஸ்கிருத சுலோகங்களும், இந்திய வேதங்களின் துளிகளும் இணைந்திருந்தன. 2000 The Screen behind the Mirror எனும் தொகுப்பும் 2003ல் Voyageur எனும் தொகுப்பும் 2006ல் A Posteriori ம் 2008ல் ஏழாவது தொகுப்பான Seven Lives Many Faces ம் வெளியாயின.

david-enigma-21apr12Rivers of Belief, Return to Innocence, Age of Loneliness, Out from the Deep, Beyond the Invisible, Gravity of Love, Voyageur, Following the Sun, Seven Lives ஆகிய பாடல்தலைப்புகள் எனிக்மாவின் கீழைத் தத்துவச் சார்பை தெரிவிக்கும். எனிக்மாவின் காண் ஒளிப்படங்களும் (Music Video) சுவாரஸ்யமானவை. Return to Innocence பாடல் முழுக்கவும் பின்னோக்கிப் பாயும் பிம்பங்களால் கோர்க்கப்பட்ட பாடல். விழுந்த ஆப்பிள் கனிகள் மரத்திற்குத் திருப்புதலில் தொடங்கி விரியும் அருமையான காட்சி அனுபவம். கேட்டுப்பாருங்களேன். மிதந்து ஊடுருவும் எலக்ரானிக் இசையும், புதிரான பாரம்பரிய மந்திரங்களும் உங்களை அமானுஷ்ய வெளிக்குள் அழைத்துச் செல்வதை அனுபவித்துப்பாருங்கள்.

இரா. பிரபாகர்
http://www.youtube.com/watch?v=TFLRHPUWBI8&feature=fvsr
http://www.youtube.com/watch?v=soIVFch-G3E

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.