“இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெற்றால் போதும். உடனே அந்த படம் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். ‘பார்ட்டி’ கொடுக்கும் கலாசாரம் இப்போது அதிகமாகி வருகிறது’’
போகிறபோக்கில் இப்படி ஒரு கிக்கான டாபிக்கில் பேசியவர் கங்கை அமரன். இடம் சத்யம் தியேட்டர். படம் ‘மன்னாரு’ ஆடியோ வெளியீட்டுவிழா.
‘’இப்போதெல்லாம் நிறைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு அழைக்கிறார்கள். பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறேன். இசையின் தரமும் குறிப்பாக பாடல்வரிகளின் தரமும் ரொம்பவும் கீழே போய்விட்டன.
கண்ணதாசன் குடித்தார்.நான் மறுக்கவில்லை. ஆனால் பாடல்வரிகளில் ‘வொய் திஸ் கொலவெறி மாதிரி குடிவெறி இல்லை. ’காலங்களில் அவள் வசந்தம்’ என்று இலக்கியத்தரமாகவே எழுதினார்.
ஆனால் இப்போதைய பாடலாசிரியர்கள் அவர் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் “கண்ணதாசன் காரைக்குடி…பேரைச் சொல்லி ஊற்றிக் குடி வண்ணதாசன் தூத்துக்குடி .. ஊரைச்சொல்லி வாந்தி எடு” என்று பாட்டு எழுதுகிறார்கள்
நானும், எங்க அண்ணன் இளையராஜாவும் ஒரு காலத்தில் ‘பார்ட்டி’க்கு போனவர்கள்தான். ‘பார்ட்டி’ கொடுத்தவர்கள்தான். ஒரு ‘பார்ட்டி’யில் பிரச்சினை ஆகிவிட்டது. அதில் இருந்து ‘பார்ட்டி’க்கு போவதையும் நிறுத்தி விட்டோம். ‘பார்ட்டி’ கொடுப்பதையும் நிறுத்தி விட்டோம்.
இப்போதும் எங்கள் வீட்டுப்பிள்ளைகள் தினமும் எங்காவது ஒரு பார்ட்டி என்று போய்விட்டு, வீட்டுக்குத்திரும்பும்போது, கையோடு ஏதாவது ஒரு பிரச்சினையையும் சேர்த்து இழுத்துக்கொண்டேதான் வருகிறார்கள். [ வெங்கட், ப்ரேம்ஜி அட்டென்சன் ப்ளீஸ் ]
இப்போதெல்லாம் ஒரு பாட்டு பாடினாலே போதும்… அல்லது ஒரு பாட்டுக்கு இசையமைச்சாலே போதும்… தலைகால் புரிவதில்லை யாருக்கும்.
‘மன்னாரு’ படப்பாடல்கள் அத்தனையும் கேட்டேன். உதயனின் இசையில் இனிமை இருக்கிறது. குறிப்பாக அந்த ஊரையெல்லாம் காவல் காக்கும் பாடலைக் கேட்டவுடன் இந்த இசை நம் குடும்பத்தின் சாயல் கொண்டது என்று தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக வார்த்தைகள் புரியும்படி அருமையாக இசையமைத்துள்ளார்,” என்றார்.
’முதல்ல நம்ம வூட்டுப்பிள்ளைங்கள கண்ட்ரோல் பண்ணிட்டு அப்புறமா சமுதாயத்துக்கு அட்வைஸ்களை அள்ளிவழங்கியிருக்கலாமோ அமரன் சார்?’
.