எழுபதுகளின் இறுதியில் வந்து சக்கைப்போடு போட்டிருக்கவேண்டிய படம்.
சீதைகளும் ராமன்களும் புராண காலத்தோடு போய்விட்டர்களா , இன்னும் மிச்சம் இருக்கிறார்களா?
கல்யாணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா, கூடாதா ?
ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும், வேலைபார்க்கும் பெண்கள் அவ்வளவா கெட்டவர்களா அவ்வளவும் கெட்டவர்களா ?
இப்படி சுமார் பதினாலு கேள்விகளுக்கு பதினாலு ரீல்களில் பதில் சொல்கிறார் இயக்குனர் ப்ரேம் நிஸார்.
பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் புரிந்து,ரிஜிஸ்தர் ஆபிஸில் கையெழுத்துப்போட்ட மை காய்வதற்குள்ளாகவே பிரிந்துவிடுகிறார்கள் விமலும், நிஷா அகர்வாலும்.
உடனே இரண்டாவது கல்யாணம் செய்ய முடிவு செய்து, தங்கள் புதிய துணையுடன் அமர்ந்து ’பழைய’ கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
ஷூட்டிங் ஆரம்பித்த முதல் நாளே, புரடக்ஷனில் டீ கொடுக்கிற பையன் கூட ஈஸியாய் யூகித்துவிட முடிகிற கதைப்போக்கு, மற்றும் க்ளைமாக்ஸ்.
இதை தெலுங்கிலிருந்து வேறு ரீ-மேக் ரைட்ஸ் கொடுத்து வாங்கி வந்தார்களாம்.
விமல்’ பசங்க’ படத்தின் ஒன் ஃபில்ம் ஒண்டர் ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் அடுத்துப்பார்க்க நேருகிற எல்லா படங்களிலும் தெரிகின்றன.அதிலும் குறிப்பாய் அவர் பேசுகிற இங்கிலீபீஸ்,.. .பேசாம ஸ்ட்ரெயிட்டா ஹாலிவுட் படத்துல நடிச்சி நீங்களே டப்பிங்கும் பே’சீறு’ங்கண்ணே என்று அனுப்பலாம் போலிருக்கிறது.
நிஷா அகர்வால் காஜல் அகர்வாலின் தங்கையாம். முதல் பிரதியை நன்றாக கிரேடிங் பண்ணி வெளியிட்ட பெற்றோர் ,ஸெகண்ட் காப்பியில் கலர் கரெக்ஷன்,கிரேடிங், ஃபினிஷிங் என்று ஏகப்பட்ட சமாச்சாரங்களில் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.
எனக்கென்னவோ காஜலைவிட அவர் கூடவே அலையும் ஒரு தோழி இவருக்கு எவ்வளவோ மேழி.
சந்தானம் வழக்கம்போல் படத்தில் வரும் சகல கேரக்டர்களையும் கலாய்க்கிறார்.நிறைய ‘கருத்துக்கள் ரிப்பீட்டு ஆவதால், சில இடங்களில் சிரிப்பு… பல இடங்களில் சிராய்ப்பு.
இசை தமன். பெரிய இடங்களில் ரிஜெக்ட் ஆன சில டியூன்களை இஷ்டத்துக்கு தள்ளிவிட்டிருப்பது ஸ்பஷ்டமாய் தெரிகிறது. அதிலும் பின்னணி இசைக்கு ரெண்டுமூனு கீ-போர்டுகளை ஆன் பண்ணிவைத்துவிட்டு மொத்த ஆர்கெஸ்ட்ராவும் த’ம்’மன் அடிக்கப்போன எஃபெக்ட் .
வழக்கம்போல் வெளங்காத வெளிநாட்டு லொக்கேஷன் பாட்டு ரெண்டும் உண்டு.அதிலும் ஒரு பாட்டில் வெள்ளைக்கார ஆண்டிகளுக்கு சேலையும் ,அங்கிள்களுக்கு அண்டர்வேர் தெரியும்படி வேஷ்டியும் கட்டி ஆடவிட்டு, டைரக்டரும் டான்ஸ் மாஸ்டரும் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் கிரியேட்டிவிட்டியைக்காட்டுகிறார்கள்.
சில பழமொழிகளை ஆராயக்கூடாது அதை அனுபவித்துப்பார்க்கவேண்டும் என்று’ பம்மல் சம்மந்தம்’படத்தில் அண்ணி சிம்ரனிடம் கமல் அடிக்கடி சொல்லுவார். அந்த வகையில் ‘இஷ்டப்பட்டு கஷ்டப்படு’ என்ற பழமொழியை ஆராயாமல் அனுபவிக்க விரும்புபவர்கள் ஒரு எட்டு எட்டிப்பார்க்க வேண்டிய படம்.