‘கேட்டுக்கோடி உருமி மேளம்’ பாட்டு கேட்டு வளர்ந்த சனங்களுல் நானும் ஒருவன் என்பதால், தியேட்டரில் டைட்டில் கார்டு பார்ப்பதற்கு முந்தின கணம் வரை உருமியை ஒரு ஒரு தாளக்கருவி என்றுதான் நினைத்திருந்தேன்.

உருமி என்பது ஒருவிதமான உறைவாள்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இயக்கத்தில், சுமார் பத்து வாரங்களுக்கு முன்பே மலையாளத்தில் உறுமி விட்டு ,கலைப்புலி எஸ். தாணுவின் வெளியீட்டில் தமிழில் செறும வந்திருக்கிறது.

ஆர்யா, பிரபுதேவா,பிருத்விராஜ், ஜெனிலியா,நித்யாமேனன்,வித்யாபாலன்,தபு என்று ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் உருமியில் குழுமியிருக்கிறார்கள்.

அதிலும் வித்யாபாலனும் தபுவும் எதற்காக இந்தப்படத்தில் வந்தார்கள், என்ன செய்தார்கள் என்பது ’சந்தோஷ’ சிவனிடம் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்து ஆராயவேண்டிய கேள்வி.

சமீபத்தில் திரையுலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பீரியட் பிலிம் மோகத்தின் இன்னொரு அத்தியாயம்தான் சந்தோஷ் சிவனின் உறுமல்.

கதை 1502-ம் ஆண்டு நடக்கிறது. கேரளாவுக்கு மிளகு வியாபாரம் செய்ய வந்த வாஸ்கோ-ட- காமா, குறுநில மன்னர்களை கைக்குள் போட்டுக்கொண்டு அட்டகாசம் செய்த்தையும், அதை சிராக்கல் கேளு நாயரான நம்ம பிருத்விராஜும், அவரது இஸ்லாமிய நண்பரான பிரபுதேவாவும் ஒரு உருமியை கையில் வைத்துக்கொண்டு எதிர்கொண்டு விரட்டி அடித்ததையும், நிகழ்காலத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது பூர்வீக நிலத்தை விற்கப்போகும் அதே பிருத்விராஜையும், பிரபுதேவாவையும் வைத்து, பூடகமாக கதை சொல்கிறார் சந்தோஷ் சிவன்.

மசாலா படம் பார்க்கும் வெகுஜன ரசிகர்களை கொஞ்சம் ஓவராகவே குழப்பக்கூடிய கதை என்றாலும், ரியல் எஸ்டேட் என்ற போர்வையில் விவசாய நிலங்களை கொலவெறியுடன் கூறுபோட்டு விற்கும் தற்சமய சந்ததிகளுக்கு அவசியம் சொல்லவேண்டிய சங்கதிதான்.

நவீன நாடகக்கார்ர்கள் உத்தியில் 1502 நடந்த கதையில் வந்த அத்தனை கேரக்டர்களையுமே நிகழ்கால கதையிலும் வைத்திருந்த சந்தோஷ் சிவன், பீரியட் கதை என்பதற்காக பெரிதும் மெனக்கெடாமல் காலமாணி போன்ற ஒன்றிரண்டு அயிட்டங்களோடு, கதையை நகர்த்தியது புத்திசாலித்தனம். இருந்தாலும், அக்காலத்தமிழ் என்ற பெயரில் அனைத்து கேரக்டர்களுமே, ராஜ்கிரண் நல்லி எலும்பைக் கடிப்பது மாதிரி, தமிழைக் கடித்து மென்று துப்புகிறார்கள்.

டர்ட்டி கேர்ள் வித்யாபாலன் பியூட்டியாக ’சலனம் சலனம்’ என்று ஒரு பாடலுக்கு ஆடி, நம் மனசை டர்ட்டி ஆக்கிவிட்டுப் போகிறார்.

பால்பாய்ண்ட் பேனா விளம்பரத்தில் வந்த சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே நமக்குத்தெரிந்தவராக இருந்ததாலோ என்னவோ, ஜெனிலியாவின் சண்டைக்காட்சிகளை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் பிருத்விராஜிடமிருந்து உருமியை நம்ம சிறுமி ஜெனிலியா கையில் வாங்கும்போது, திருவிளையாடல் தருமியைப்பார்க்கும்போது வரும் அளவுக்கு சிரிப்பு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

[…ஸ்… அப்பாடா வரவர டைட்டிலுக்கு லிங்க் புடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துபோயிடுது…]

மலையாளத்தில் ‘பழசிராஜா’வுக்கு அடுத்த படியான, 23 கோடி செலவில் தயாரான இந்த பிரமாண்ட படம் வாஸ்கோ ட- காமாவை கொல்லத்துடித்த கேரள வீர்ர்களின் கதை என்கிற வகையில் அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சுவாரசியமான படமாக இருந்திருக்கலாம். தமிழில் அது மிஸ்சிங்.

ஒருவேளை, நிகழ்காலக்கதையை அதிகமாக வைத்து, பீரியட் கதையின் நீளத்தைக்குறைத்திருந்தால், படம் தமிழிலும் சுவாரசியமாக இருந்திருக்குமோ என்னவோ?,

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.