ஸ்ரீதேவியின் வெறிபிடித்த தீவிர ரசிகன் என்பதிலிருந்து நிஜ ஸ்ரீதேவியை நோக்கிய என் பயணம் நான் எனது முதல் படமான ‘சிவா’வின் போது தொடங்கியது. சென்னையில் நாகார்ஜூனாவின் ஆபீஸிலிருந்து கிளம்பி பக்கத்திலிருக்கும் தெருவில் ஸ்ரீதேவி வசிக்கும் வீட்டை நோக்கி நடப்பேன்.
ஸ்ரீதேவியின் வீட்டு வாசல் கேட்டின் வெளியே நின்று கொண்டு ஸ்ரீதேவியின் வீட்டையே ஆவலுடன் கவனித்துக் கொண்டிருப்பேன். அழகு தேவதையான ஸ்ரீதேவி அப்படி ஒரு சாதாரண பங்களாவில் தான் வசிக்கிறார் என்பதை
என்னால் நம்பவே முடியவில்லை. அது ஒரு சாதாரண வீடு என்று ஏன் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் கட்டிய எந்தவொரு வீடும் அந்த அழகு தேவதை வாழத் தகுதியான இடமல்ல என்று நினைத்தேன்.
பின்னர் என்னுடைய படம் ‘சிவா’ ஹிட்டானதும் எந்த வீட்டின் வாசல் கேட்டுக்கு வெளியே நான் நின்றேனோ அதே வீட்டிற்கு ஸ்ரீதேவியை சந்திக்க ஒரு புரொட்யூசர் என்னை அழைத்துச் சென்றார். என்னால் என்னையே நம்ப முடியவில்லை. அது ஒரு இரவு. அதிர்ஷ்டவசமாக கரண்ட் கட்டாகியிருந்தது. நான் அவருடைய வீட்டு வரவேற்பரையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தேவதை வரவுக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் இதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. அவருடைய அம்மா சொன்னார் ஸ்ரீதேவி மும்பைக்குச் செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்கு அவசர அவசரமாக பேக்கிங் செய்துகொண்டிருக்கிறார் என்று.
நான் ஹாலில் காத்திருக்கையில் அறைகளுக்கிடையே அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்த ஸ்ரீதேவி அவ்வப்போது ஹாலைக் கடந்து வேகமாகப் போவார். அப்படிப் போகும் போது எங்களை தாமதப்படுத்துவதற்காக மன்னிப்பு கோரும் பாவனையில் சிரித்துவிட்டுப் போவார். கடைசியாக அவர் வந்து சில வார்த்தைகளில் என்னுடைய அடுத்த படத்தில் நடிப்பதில் தனக்கு மிகவும் விருப்பமாயிருக்கிறது என்று சொல்லிவிட்டு மும்பை பறந்துவிட்டார்.
நான் அவர் நடித்த’க்ஷண க்ஷணம்’ என்கிற எனது தெலுங்குப் படத்தை அவருக்கு என்னுடைய கேமராவிலேயே எழுதிய காதல் கடிதமாகவே உருவாக்கினேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் சமயங்களில் அவரை ஒரு மனிதராக இனங்கண்டு கொள்ள ஆரம்பித்தேன். அவர் தன்னைச் சுற்றி ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் எழுப்பிக் கொண்டு அதை எவரையும் தாண்ட விடுவதில்லையென்பதை உணர்ந்தேன். அவருடன் பணிபுரிந்த போது தான் பாத்திர உருவாக்கத்திலும் நடிப்பின் நுட்பங்களையும் ஒரு இயக்குனராக நான் நிறைய புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மேலும் அவருடைய நடிப்புத் திறனிலிருந்து தான் சினிமா நடிப்பு என்பது நிஜ நடிப்பை(Method Acting) விட பலமடங்கு மிகச் சிக்கலானது என்பதைப் புரிந்துகொண்டேன்.
மக்களிடமிருந்து அவருடைய பாப்புலாரிட்டியை நீங்கள் நேரில் பார்த்தாலொழிய நம்பமாட்டீர்கள். ஆந்திராவில் நந்தயால் என்கிற ஊரில் நாங்கள் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்த போது ஸ்ரீதவி தங்கியிருந்த பங்களாவைச் சுற்றி சுமார் இருபதாயிரம் பேர் கொண்ட கூட்டம் இரவு முழுதும் இருக்கும். அவர் தூங்கிக் கொண்டிருப்பதை சும்மா பார்த்துக்கொண்டேயிருக்கும் அந்தக் கூட்டம். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறார் என்பதை தூரத்தில் வரும் அவரது காரின் பின்னால் ஓடிவரும் ஆயிரக்கணக்கான மக்களால் கிளம்பும் தூசிப் படலத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவோம்.
நான் ‘க்ஷண க்ஷணம்’எடுத்து முடித்தேன். இதற்கிடையே அவரது வாழ்வில் நிறைய துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவரது தந்தையின் மரணமும் அவரது தாயின் மனநலம் குன்றியதும். ஒவ்வொருவரும் பேசத் துடித்துக்கொண்டிருந்த ஒரு பெண் திடீரென்று உலகிலேயே யாருமற்று தனித்து விடப்பட்டார். பின் போனிகபூர் அவர் வாழ்வில் நுழைந்து அவரைத் திருமணம் செய்துகொண்டார். அதற்காக போனிகபூரைக் கொல்லத்துடித்த லட்சக்கணக்கான பொறாமைபிடித்த ஆண்களில் நானும் ஒருவன்.
புகழின் உச்சத்திலிருந்தும், பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திலிருந்தும் வெளியேறிய அவரை நான் போனிகபூரின் வீட்டில் ஒரு சாதாரணக் குடும்பப் பெண்ணாக விருந்தினருக்கு டீ கொடுத்து உபசரிப்பதைப் பார்த்தேன். அந்த தேவதையை சொர்க்கத்திலிருந்து கீழே கொண்டுவந்து ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக மாற்றிவிட்டதற்காக நான் போனிகபூரை வெறுத்தேன். அவர்கள் வீட்டுக்குப் போவதை நான் நிறுத்தினேன். ஏனென்றால் ஸ்ரீதேவியை ஒரு சாதாரணப் பெண் ரூபத்தில் பார்ப்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
நிஜமான ஸ்ரீதேவியை போனிகபூர் தன் வீட்டில் வைத்திருந்தால் தான் என்ன? நான் தான் எனது மனமென்னும் கேமரா கோவிலில் அந்தத் சினிமா தேவதையை கடவுளாக பிடித்து வைத்துவிட்டேனே! அத்தோடு அல்லாமல் எனது சினிமா கனவுகளில் புனிதமான தேவதையாகவும் அவரே எப்போதும் தோன்றுகிறார். ஸ்ரீதேவியைப் படைத்ததற்காக கடவுளுக்கும் கேமராவைப் படைத்ததற்காக லூயி லுமுயிர்(Louis Lumiere)க்கும் நான் நன்றி கூறுகிறேன் ஏனென்றால் அந்தக் கேமராவில் தானே ஸ்ரீதேவியின் அழகைப் பிடித்து என்றென்றும் பாதுகாத்து வைத்திருக்க முடிந்திருக்கிறது. பால்கிக்கும், கௌரிக்கும் அவரை திரும்ப ஒரு சிறந்த, தகுந்த படத்தின் மூலம்(இங்கிலீஸ் விங்கிலீஸ்) திரையுலகுக்கு மீண்டும் கொண்டுவந்ததற்காக நன்றி கூறுகிறேன்.
–ஸ்ரீதேவி இங்கிலீஸ் விங்கிலீஸ் என்கிற ஆங்கிலப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்ததையொட்டி மிட்-டே இதழுக்கு ராம்கோபால் வர்மா கொடுத்த பேட்டி.