படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே, நல்லபடியாக விமர்சனங்கள் வந்தால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்குமே என்ற ஆர்வத்துடன் ‘ஹரிதாஸ்’ படத்தை கடந்த ஞாயிறன்றே பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ போட்டார்கள்.
இந்தமாதிரியான முன்னார்வ ஷோக்கள் பலமுறை வெறுமனே ஆர்வக்கோளாறு ஷோக்களாகவே மாறி படம் ரிலீஸான பிறகும் விமர்சனம் எழுதமுடியாத தர்மசங்கடமாகவே பெரும்பாலும் மாறிவிடும்.
ஆனால் ‘ஹரிதாஸ்’ வெகுநாட்களுக்குப் பிறகு, வந்திருக்கும் மிக அருமையான படம்.
தங்கள் வீட்டிலேயே அப்படிப்பட்ட பிள்ளை இருந்தபோதிலும், அந்நோயின் பெயர், அதை எப்படி எதிர்கொள்வது என்று விழிப்புணர்வு இல்லாத, ’ஆட்டிஸம்’ பாதிப்புற்ற சிறுவன் தான் படநாயகன்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான கிஷோரின் மனைவி பிரசவத்தின்போது இறந்துவிட, மனப்பிறழ்வு [ஆட்டிஸம்] பாதிப்படைந்த அவரது மகன், பாட்டியிடம் வளர்கிறான். பணியில் இருக்கும் ஒரு தினம், கிஷோருக்கு அவரது அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப்போய் திரும்பி வருகையில், உறவினர்களிடம் மகனை ஒப்படைக்க விரும்பாமல் தன்னோடே அழைத்து வருகிறார்.
பேச்சுவராத, தன்னை ஏறிட்டும் பாராத, வேறொரு உலகில் வாழும் சிறுவனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்று ஒரு கட்டத்தில் குமுறி அழும் கிஷோர், குழந்தை மருத்துவர் யூகிசேதுவை சந்தித்தவுடன் ‘ஆட்டிஸம்’ சம்பந்தமான சில தெளிவுகள் பெற்று மகனுக்காக சில மகத்துவ காரியங்களில் ஈடுபட்டு அவனை எப்படித்தேற்றுகிறார் என்பதுதான் கதை. இதனை ஒட்டிய பக்கத்து டிராக்கில்,கிஷோரின் என்கவுண்டர் நண்பர்கள், இவரது எதிரிகள் சம்பந்தமான ஒரு கதையும் விறுவிறுப்பாக நகர்கிறது.
நல்ல கதையில் காதல், டூயட்டெல்லாம் இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற முடிவுடன், கிஷோருக்கும், அவரது மகனின் டீச்சராக வரும் சிநேகாவுக்கும் இடையில் எதையும் வைக்காமல், கடைசிவரை கதையை நகர்த்தியதற்கும், கிஷோரின் பிள்ளையை வில்லன்கள் கடத்தினார்கள் என்ற யூகத்திற்கு இடமளித்து, அப்படியில்லாமல், அவன் காணாமல் போனதையே கதையின் முக்கிய புள்ளியாக்கியதற்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலனுக்கும் சபாஷ்.
ஒரு பக்கம் என்கவுண்டரில் சிறுத்தையாக, இன்னொரு பக்கம் ‘ஆட்டிச’குழந்தையின் தந்தையாக மனம் சிறுத்தவராக, கிஷோருக்கு அருமையான ஆடுகளம் இந்தப்படம். இவரோடு சேர்ந்து சிறுவனும், சிநேகாவும்,.. அண்ணா பிரசன்னா, அண்ணி அடுத்த வருஷம் வாங்கப்போற அவார்டுகளுக்கு அலமாரியில இப்பவே கொஞ்சம் விலாவாரியா இடம் ஒதுக்கிவைங்க.
எவ்வளவு துணிச்சல் இருந்தாலும், இருட்டினில் நடக்கையில், நடுங்கிக்கொண்டே பாட்டுப்பாடுவோமே, அதுபோலவே ஒன்றிரண்டு பிட்டுப் பாடல்களையும், போலீஸ்காரர்களுக்கு வக்காலத்து வாங்கி ஒரு கானாபாடலும் சேர்த்து லைட்டாக மசாலா தூவ முயன்றிருக்கிறார் இயக்குனர். அதேபோல் பரோட்டா சூரி, இதுல உங்க காமெடி கொஞ்சம் சாரி.
முன்னாள் பத்திரிகையாளர் வெங்கடேஷ் வசனம் எழுதியிருக்கிறார். ‘என் பையன் போட்டியில ஜெயிக்கவேணாம் சார். அதுல கலந்துக்கிட்டாலே போதும்’ ‘அவன் என்ன கோச்சா, இல்ல காக்ரோச்சா? டாக்டர் சொல்லவேண்டியதை கோச் சொல்றான். கோச் சொல்லவேண்டியதை டாக்டர் சொல்றான்’ என்று பல இடங்களில் ஈர்த்து, பத்திரிகையாளர்கள் மத்தியிலயும், இன்னும் கூட ஓரளவுக்கு வெவரமானவங்க இருக்காய்ங்க’ என்று மானம் காக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக இப்படத்தின் ஜீவன்களாக இருப்பவர்கள் படத்தின் தயாரிப்பாளர் ராமதாஸும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும். இப்படி ஒரு கதையைப் படமாக்க, அதுவும் பெரும்பொருட்செலவில், முன்வந்ததற்காக,’ அய்யா வந்தனம், வந்தனம்.
படத்தின் கதையை சிறுவன் ஹரி சொல்வதுபோல் அமைத்திருந்தாலும், படம் துவங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை ஒளிப்பதிவாளரின் படமாகவே இது நகர்கிறது. ஒரு சில காட்சிகளின் அழுத்தத்தை, இது திசைதிருப்பினாலும், வெகு நேர்த்தியான, உள்ளம் கொள்கிற ஒளிப்பதிவு ரத்னவேலுவுடையது. வெல்டன் ராண்டி. ‘எந்திரன்’ மாதிரி வெட்டிப்படங்களுக்கு உங்க திறமையை வீணடிக்கிறதை விட்டுட்டு, இப்படி நல்ல படங்களுக்கு ரண்டி.