ராம் (என்கிற ராம சுப்பிரமணியன்) தனது முதல் படமான ‘கற்றது தமிழி’லியே நல்ல இயக்குநர் என்கிற பெயரை சம்பாதித்துக் கொண்டவர். இந்த தங்க மீன்களில் அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தங்க மீன்கள் ஒரு நல்ல கதை நேர்த்தியுள்ள அருமையான மலையாளப் படத்தைப் போல வாசம் அடிக்கிறது.
ராம் ஒரு ஏழையான, சரியான வேலை கிடைக்காத ஒரு கிராமத்து அப்பா. அவருடைய 8 வயதுக் குழந்தை தான் சாதனா. அவள் சிறு வயது முதலே பள்ளிப் படிப்பில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. மாறாக இயற்கை சூழ்ந்த அந்த கிராமத்து வயல் வெளி, பறவைகள், மீன்கள், ரயில் என்று உலகத்தை சந்தோஷமாக ரசிக்கும் குழந்தை அவள். அவளுடைய விளையாட்டுத்தனம் அவள் படிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளியின் வரையறைகளுக்குள் இல்லாததால் அவள் பெயிலாகிப் போனாலும் ஓய்வு பெற்ற ஆசிரியரான அவளது தாத்தா (ராமின் அப்பாவாக பூ ராம் அருமையாக நடித்திருக்கிறார்)வின் ரெக்கமண்டேஷனால் அவள் பல வகுப்புக்களைத் தாண்டி வந்திருக்கிறாள். அவள் ஏதோ குறையுள்ள குழந்தை அதனால் அவளால் மற்ற குழந்தைகள் அளவுக்கு அவளால் படிக்க முடியாது என்று அனைவரும் நினைக்கும் போது அவளுடைய அப்பாவான ராம் அதை ஏற்க மறுக்கிறார்.
ராம் தனது தந்தையைச் சார்ந்தே வாழ்கிறார். இந்நிலையில் சாதனாவின் பீஸ் கட்டவேண்டிய வேளை வருகிறது. அதைக் கட்ட முடியாமல் தடுமாறும் ராம், தந்தையின் உதவியையும் வீம்பாய் மறுக்கிறார். பின் வீட்டை விட்டு வெளியேறி கேரளா சென்று பிழைக்கிறார். பாசம் மிக்க தந்தையைப் பிரிந்து வாடும் மகள் அவளின் பிறந்த நாள் பரிசாக நாய்க்குட்டி வாங்கித் தர கேட்கிறாள். அதற்குள் சாதனா படிக்கும் பள்ளியே அவளுக்கு எமனாக மாறி நிற்கிறது. எல்லோராலும் ஒதுக்கப்படும் சாதனா அவற்றிலிருந்து மீண்டு வந்தாளா? அவளுடைய அப்பாவின் அன்பும் நம்பிக்கையும் அவள் வாழ்க்கையை மீட்க முடிந்ததா?. இது ஒரு கதைச் சுருக்கம்.
கதை என்பது இது மட்டுமல்ல. இப்படத்தில் ஒவ்வோர் பாத்திரத்திற்கும் ஒரு விதமான உள்ளார்ந்த கதை ஒன்று இருக்கிறது. யாரும் வில்லத்தனமாக சிரிப்பவர்கள் இல்லை. யார் கதையையும் இயக்குனர் விலாவரியாகச் சொல்வதும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. மிகச் சிறந்த க்ளாசிக்குகளில் இது போன்ற தன்மை இருக்கும். உதாரணமாக எவிட்டா மிஸ். சாதனாவின் ஆதர்சனமான டீச்சர். அவர் மிகச்சிலக் காட்சிகளிலேயே வந்தாலும் அவரும் அவர் கணவரும் மனத்தில் பதிந்து நிற்கிறார்கள். அதே போல ராமின் மனைவி. 12 வது படிக்கும் போதே காதலன் ராமுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவர். ரிட்டையர்ட் வாத்தியரான ராமின் அப்பா. மிகவும் ஸ்ட்ரிக்ட்டான அந்த மிஸ்…அம்மா செய்து தரவிருக்கும் பூரிக்காக முடிவை மாற்றிக் கொள்ளும் சிறுமி.. இப்படிப் பல பாத்திரங்கள்.
படத்தின் காட்சியமைப்புகள், வசனங்கள் பல இடங்களில் பளிச். நிறைய இடங்களில் யதார்த்தம். சில இடங்களில் மட்டும் மிகை (உ.ம். நாய்க்குட்டிக்காக ஒரு இசைக்கருவியை தேடிப் போவது). அதே போல எல்லோர் நடிப்பும் கிட்டத்தட்ட கச்சிதம். ராம் மற்றும் சாதனா தவிர. அவர்களின் நடிப்பும் 90 சதவீதம் மார்க்குகள் பெற்றாலும் ஒரு 10 சதவீதம் மிகை நடிப்பாகிவிடுகிறது. ஆனால் இவை எதுவும் படத்தின் மூலத்தை பாதித்துவிட வில்லை. எழுத்தாளர் வண்ணநிலவனின் பெயர் கதை இலாகாவில் இருந்தது. நிச்சயம் அது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ராம் இப்படி எல்லோரையும் சேர்த்துக் கொண்டதில் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள், அப்பா அடிக்கும் இடம், எவிட்டா மிஸ், மனைவி, தங்க மீன்கள், பள்ளிக்கூடத்திலிருந்து சாதனாவை கூட்டிவர காரில் வரும் தாத்தா, சைக்கிளில் வரும் அப்பா, திருடும் அப்பா, திருடும் மகள், இப்படி படம் நெடுக நெகிழ வைக்கும் காட்சிகள். நிறைய இடங்கள் கண்கலங்க வைக்கும் நீங்கள் எளிமையான அப்பாவாக இருந்தால்.
படத்தின் அடுத்த பெரும்பலம் யுவன். பாடல்கள் அனைத்தும் அருமை. ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாட்டும் இன்னுமொரு குழந்தைகள் பாட்டும் நன்று. படத்தில் யுவனின் பிண்ணனி இசையும் பிரமாதமாக இருக்கிறது. இன்னொரு பலம் ஒளிப்பதிவாளர் அரபிந்து சாரா (இவர் ஆணா பெண்ணா ? பெயரை வைத்து கண்டுபிடிக்க முடியவில்லை). படம் முழுவதும் பச்சைப் பசேலென இயற்கை கொஞ்சி விளையாடுகிறது. இப்படி வயல்வெளிகளுக்கு நடுவே பசுமையான வெளியில் பள்ளிக்கூடம் போகும் அனுபவம் இக்காலத்தில் கிடைக்குமா? வாய்ப்பே இல்லை. எடிட்டர் படத்தில் சொன்ன வேலையை செய்திருக்கிறார். ஆனால் அவர் இன்னும் செய்திருக்க வாய்ப்பு படத்தில் இருக்கிறது.
படத்தின் முடிவில் ஒரு மெஸேஜ் சொல்ல வேண்டும் என்று வலிந்து திணிக்கப்படாமல் ஒரு தகப்பன் தன் குழந்தையின் கிரியேட்டிவிட்டி அவள் படிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளியின் இரும்புச் சட்டங்களுக்குள் சிதைந்து போவதை அனுமதிக்க விரும்பாமல் அவளை அதிலிருந்து வெளியில் மீட்டெடுக்கிறான் என்று எளிமையாக முடித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு செய்தித்தாளில் படித்த செய்தி. ஒரு கலெக்டர் தனது மகனை தான் படித்த அரசுப் பள்ளியிலேயே படிக்க கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அவர் கலெக்டர் என்பதால் அந்தப் பள்ளியின் எல்லா லஞ்ச ஓட்டைகளையும் அடைக்க முடிந்ததோடல்லாமல் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களின் அலட்சிய மனோபாவத்தையும் மாற்ற முடிந்திருக்கிறது. மெட்ரிக் பள்ளிகள் என்னும் குளத்திற்குள் பெரும் வாழ்க்கை, வேலை, கை நிறைய சம்பளம், நுணி நாக்கில் ஆங்கிலம் என்று ஆழத்தில் மாயநிழலாகவே தெரியும் தங்க மீன்களைத் தேடிப் போய் மூழ்கிப் போகும் குழந்தைகளை மீ்ட்டெடுக்கும் பாசமிகு ராம்களாக எத்தனை அப்பாக்கள் மாறப் போகிறார்கள்?
அப்பாக்களே, அம்மாக்களே கண்டிப்பாக குழந்தைகளை உடன் அழைத்துச் சென்று பாருங்கள் இந்தத் தங்க மீன்களை.
க.கு: இப்படம் வர்த்தகரீதியான வெற்றிப் படமல்ல. இதை எடுத்த முதல் கணம் முதல் தயாரிப்பாளராயிருந்த கௌதம் வாசுதேவமேனனுக்கும், ராமுக்கும் இது நன்கு தெரிந்திருந்தது. அப்படி இருந்தும் இப்படத்தை பல கோடிகள் செலவு செய்து எடுக்க முன்வந்து ராமின் ஆளுமையின் மேல் நம்பிக்கை வைத்து அவர் இஷ்டத்துக்கு படம் எடுக்க அனுமதித்த கௌதம் தமிழில் ஒரு நல்ல படத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை பாராட்டியே ஆகவேண்டும். எல்லாமே வர்த்தகமாகவும், காசு பணம் துட்டு மணி மணி என்று அலையும் இக்காலத்தில் பெயர், அவார்டுகள் கிடைத்தாலே கூட நல்லது என்று விரும்பும் தயாரிப்பாளர்களும் இருந்தாலே இது போன்ற படங்கள் தமிழில் சாத்தியமாகும்.