தமிழத்திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களுக்கு ஜோடியாக பலபடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவிகா. அவரது மகள் கனகாவும் கூட நடிகையானார். சமீபத்தில் வந்த ‘வால்மீகி’ படத்தில் புதிதாக அறிமுகமான இவரின் பெயரும் தேவிகா தான். தற்போது ‘மனிதக் காதல் அல்ல’, ‘பூனை’ ஆகிய
படங்களில் நடித்துவருகிறார்.
தமிழ்ச் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறீர்கள். தமிழ்ச் சினிமா பற்றி..
நான் பிறப்பில் மலையாளி. எப்போதும் கேரளாவில் தமிழ்நாட்டுப் படங்களும் ரிலீஸாகி பரபரப்பாக ஓடும். நானும் சிறுவயதிலிருந்தே மலையாளப் படங்களுடன் தமிழ்ப் படங்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கு தமிழைப் புரிந்துகொள்வது இன்னும் எளிதாகிவிட்டது. பெரிதாக வித்தியாசம் எதுவும் உணரவில்லை.
சினிமாவில் நடிக்கவேண்டும் என்று எப்படித் தோன்றியது?
சிறுவயதில் மணிரத்னம் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன். அவருடைய ‘தளபதி படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதில் மம்மூட்டி சாரும், ரஜினி சாரும் இணைந்து கலக்கியிருப்பார்கள். அப்போதே எனக்கு ஒரு தமிழ்ப் படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது அது நிறைவேறிவிட்டது.
தமிழ்ச் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள்..
ரஜினி ,கமலைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. தற்போதைய இளம் நடிகர்களில் எனக்குப் பிடித்த நடிகர் தனுஷ். ‘துள்ளுவதோ இளமை’ படத்திலிருந்தே அவரது தீவிர ரசிகை நான். நடிகை.. எனக்குப் பிடித்த நடிகை நான்தான்.
எப்படிப்பட்ட நடிகையாக வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.?
நிறைய நினைவில் நிற்கும் படங்களில் நடித்திருக்கவேண்டும். 20 வருடம் கழித்துப் பார்த்தாலும் அசரடிக்கக்கூடிய நடிகையாக தெரியவேண்டும் என்பது என் ஆசை. ‘தளபதி’யில் நடித்த ஷோபனா போல வெரைட்டியான நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களில் நடிக்கவேண்டும். தேசிய விருதும் வாங்கி, கமர்ஷியல் படங்களிலும் வெற்றிகரமாக வந்தவர் அவர்.
தமிழ்பேசத் தெரியுமா?
சின்ன வயசிலேருந்து தமிழ்ப் படங்கள், தமிழ் மக்கள்னு நிறைய பழகி தமிழ் தெரியாம இருக்குமா? மலையாளம் பேசற மாதிரி சகஜமா தமிழ் பேசுவேன். சொல்லப் போனால் தமிழ்மேல் இன்னும் பற்று அதிகமாகவே இருக்கிறது.
எதுமாதிரியான வேடங்கள் ஏற்பீர்கள்?
‘பனா’ படத்தில் கஜோல் செய்தது போலவும், ‘கஹானி’ படத்தில் வித்யாபாலன் நடித்தது போலவுமான வித்தியாசமான அதே சமயம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுமான ரோல் ஒன்றையாவது செய்தால் அதுவே ஆயுசுக்கும் போதும்.