’ஃபேஸ்புக், ட்விட்டர்களில் எழுதுகிற அனைவருமே விமர்சகர்கள் என்று ஆகிவிட்ட நிலையில் இன்று காலையிலிருந்து சுமார் நூறுக்கும் மேற்பட்ட வெரைட்டியான விமர்சனங்களைப் படித்து அரைப்பைத்தியம் ஆனநிலையிலும் ‘லிங்கா’வுக்கு நானும் விமர்சனம் எழுதத்துணிந்ததை என்னவென்று சொல்வது?
வேறு வழி? சட்டம் தன் கடமையைச்செய்யும் என்பதுபோல, படம் பார்த்தால் விமர்சனம் எழுதித்தானே ஆகவேண்டும்.
படத்தில் தாத்தா பேரன் என்று இரண்டு ரஜினிகள். தன் தாத்தாவின் அருமை இன்னதென்று அறியாமல் சந்தானம் மற்றும் கருணாகரன் கூட்டணிகளுடன் அன்றாடம் திருடி பொழப்பு நடத்துனராக அலைகிறார் ரஜினி. ஒரு வைரத்திருட்டில் மாட்டிக்கொள்ளும் அவரை பெயிலில் எடுத்து சொந்த ஊருக்கு அழைத்துச்செல்கிறார் அக்கா அனுஷ்கா. அங்கு சென்றதும் ஒரிஜினல் லிங்கேஸ்வரனாகிய தாத்தாவின் ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது.
இந்தக்கதை நடப்பது 1939-ல்.
ராஜவம்சமாக இருந்தாலும், கட்டிடக்கலை பொறியியல் பயின்ற மற்றும் மக்களுக்கு சேவை செய்வதற்காக கலெக்டர் பணி செய்பவராக வருகிறார் தாத்தா ரஜினி.
கலெக்டர் பணி செய்யும் சமயம் சேலையூர் என்ற ஊருக்குச்செல்ல நேர்ந்து, அங்குப்ளவுஸ் இன்றி வெறும் சேலையில் அலையும் சோனாக்ஷியின் அழகில் மயங்கி, அந்த ஊருக்கு அணைகட்ட ஆசைப்படுகிறார். அதற்கு வெள்ளைக்கார அதிகாரிகள் அணைபோட, தன் அரண்மனை பங்களா ஆஸ்திகள் அனைத்தையும் விற்று ஊர் மக்களுக்காக அணைகட்டிக்கொடுத்து, வழக்கம்போல மக்களின் பழிச்சொல்லோடு தியாகியாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்.
தாத்தாவின் அருமை அறிந்து பேரன் லிங்கேஸ்வரன் உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அந்த அணையை பாம் வைத்து தகர்க்க அரசியல்வாதி ஜெகபதி திட்டம் போட, அவரை தீர்த்துக்கட்டி, மீண்டும் ரஜினி எப்படி நடையக்கட்டினார் என்று முடிகிறது கதை.
ரஜினியின் நடிப்பு எப்படி என்று எழுதுவதெல்லாம் தினத்தந்தி துபாயில் இன்னொரு எடிசன் ஆரம்பிச்சிட்டாங்களாம் என்பது போன்ற உப்புசப்பற்ற செய்தி. 65 வயதிலும் அவரது இளமைத்தோற்றம் அசரடிப்பது நிஜம். முறையே அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி மற்றும் மீனாட்சிகளின் வாரிசுகளுடன் கூட அவர் டூயட் ஆடிவிட்டு ரிடையரானாலும் யாரும் அவரைக்கேட்டுவிட முடியாது.
அனுஷ்காவுக்கு ரொம்ப சின்ன ரோல்தான். ஆனால் சோனாக்ஷி ஒரு க்ளாஸ் பக்ஷி. ப்ளவுஸ் போடாமால் சேலையூரில் ஒருவிதமான சேலைக்கட்டுடலுடன் அலையும் அவரை ரசிக்காமல் இருக்கமுடியாது.
சந்தானம் வழக்கம்போல் கேப்பு கிடைக்கும்போதேல்லாம் யாருக்காவது வசனங்களால் வைத்துக்கொண்டிருக்கிறார் ஆப்பு.
பென்னிகுக்கின் கதை மாதிரி ஒன்றை, சினிமாவுக்காக காரம்,மசாலா போட்டு குக்கியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். லாஜிக் பற்றி எந்தக்கவலையும் அவர் எப்போதும் கொள்வதில்லை. ரஜினி படம் என்றால் சொல்லவும் வேண்டுமா? ஆனாலும் க்ளைமாக்ஸ் ஃபைட் ஸாரி ரொம்ப ஓவர்.
நட்சத்திரங்கள் பறிக்கவந்தாய்’ போல வரும் ஒரு பாடலில், அந்த ஒரே ஒரு பாடலில் மட்டும் ரஹ்மான் கவர்கிறார்.
பஞ்ச் டயலாக்குகளும், கொஞ்சம் தேவைக்கதிகமாக கதையும் இருப்பதால் ரஜினியின் ‘தீவிர’ ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு சோதனைதான்.
மற்றபடி ‘மற்றபடி, அதாவது, வந்து என்னசொல்ல வரோம்னா….