வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”.
சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், “பாபநாசம்” (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையை ஒத்திருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் தனது கதையை திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே பாபநாசம் படபிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பாபநாசம் படப்பிடிப்பிற்கு இடைக்கால தடை பெற்றிருந்தார். அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர்.
இந்நிலையில் எர்ணாகுளம் 2வது கூடுதல் நீதிமன்ற அமர்விற்கு வந்த இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தயாரிப்பாளருக்கு ஆதரவான தீர்ப்பினை அளித்துள்ளார். இதனால் பாபநாசம் படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது.
பாபநாசம் படத்தின் இசை மற்றும் பட வெளீயீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.