தமிழ் ரசிக பெருமக்களின் கலாரசனைக்கு என்ன பங்கம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஆவிகளும், பேய்களும், மூடநம்பிக்கைகளும் நிறைந்த பேய்ப்படங்கள் க்யூ கட்டி நிற்பதோடு கல்லாவும் கட்டுகின்றன.  அந்த வரிசையில் இந்த டிமான்டியும் சேர்ந்திருக்கிறது.

‘அருள்நிதியும் அவரது 3 நண்பர்களுமாக ஒரு த்ரில் அனுபவத்திற்காக டிமான்ட்டி காலனி என்றழைக்கப்படும் ஒரு பாழடைந்த பங்களாவிற்கு ஒரு இரவில் செல்கின்றனர். அதிலிருந்து அவர்களை துரத்தும் ஒரு பேய். அந்தப் பேயிடம் இருந்து தப்பித்தார்களா?’ என்பது கதை. இதில் பேய்பற்றிய 1900 நடந்த ப்ளாஷ் பேக் கதையும் ஒன்று.

படத்தின் முக்கிய ஹைலைட்களாக திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இயக்கத்தை சொல்லலாம். முற்பாதியில் நண்பர்களின் வாழ்க்கை பற்றிய விவரிப்பு, குத்து டான்ஸ் என்று மெதுவாக ஆரம்பித்துச் செல்லும் கதை இடைவேளைக்குப் பிறகு மிரட்டல் வேகம் எடுக்கிறது.

தற்போது நிறைய சினிமாக்கள் வெறும் 2 மணி நேர பொழுதிற்கு ஆடியன்ஸை கட்டிப் போட்டால் போதுமானது, கொடுத்த காசுக்கு கூவினால் போதுமானது என்கிற வரையறையைத் தாண்டி வேறு எந்தப் பிரயத்தனங்களும் எடுத்துக் கொள்வதில்லை. சமூக அக்கறை, மனித நேயம் என்பன எல்லாம் தவிர்க்க இயலாத போது மட்டுமே. இயக்குனர் அஜய் ஞானமுத்து 2 மணி நேர மிரட்டலை மட்டுமே குறிவைத்திருக்கிறார். அதில் அவருக்கு வெற்றிதான்.

அருள் நிதியும் அவரது நண்பர்களான மூன்று பேரும் தங்களது பங்கை சரியாக நடித்திருக்கின்றனர்.  அந்த பிரெஞ்சு துரை பற்றிய ப்ளாஷ்பேக் அருமையாக செய்திருக்கிறார் கலை இயக்குனர்.  காட்சிகளை முன்பின் மாற்றிக் காட்டியதில் எடிட்டர் புவன் மெனக்கெட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் படத்துக்கு இன்னொரு ஹீரோ. பாழடைந்த பங்களா காட்சிகள், ப்ளாஷ்பேக், நண்பர்களின் அறைக் காட்சிகள் என்று எல்லா இடங்களிலும் துல்லியமான பதிவு. இசையமைப்பாளர் கெபா ‘சைக்கோ’ படத்தின் வயலின் இசையை அப்படியே சுட்டு போட்டதை தவிர்த்து த்ரில் குறையாமல் காப்பாற்றியிருக்கிறார்.

பேய்க்கதையின் ப்ளாஷ்பேக்கில் வரும் கதை விசித்திரமானது. வெள்ளைக்காரனைக் கண்டு நடுநடுங்கி அடிமைகளாக வாழ்ந்தது தான் அன்றைய வரலாறு. அதில் ஒரு ரேப் அந்தக் காலத்தில் சாத்தியமேயில்லை. ஆனால் மனவளர்ச்சிய குன்றிய பெண் என படைக்கும்போது அந்த சாத்தியமும் கிட்டுகிறது. இறுதியில் அன்றுபோலவே இன்றும் வெள்ளைக்காரன் கையில் நாம் எல்லாம் வெட்டுப்பட்டும், சுடப்பட்டும் சாகிறோம். டிமான்ட்டி பல நூறு வருடங்கள் கடந்தும் நம்மை கொல்வதில் வெற்றியடைகிறான்.

ஒரு டாலரை கேட்டா குடுத்துடப் போறோம். அதுக்கு இவ்வளவு அமர்க்களம் பண்ணணுமா ? டிமான்ட்டி.  மற்றுமொரு மிரட்டல் பேய்.

Related Images: