எலி வடிவேல் தெனாலி ராமனில் யுவராஜ் தயாளனின் இயக்கம் சரியில்லை என்று பார்த்திருந்தும் திரும்பவும் சூடு போட்டுக் கொண்ட கதையாக அவருடனே சேர்ந்து இந்த சிரிப்பு வராத காமெடி படத்தை தந்திருக்கிறார்.
60களில் சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் நடக்கும் கதை. அந்த நேரத்தில் சிகரெட் கடத்தலில் நம்பர் ஒன்னாகத் திகழும் பிரதீப் ராவத்தைப் பிடிக்க திட்டமிடுகிறது போலீஸ். எலி வடிவேல் தனது குழுவுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து சாமர்த்தியமாகத் தப்பி வரும் ஒரு
லோக்கல் திருடன். எலி வடிவேலுவை உளவாளியாகப் பயன்படுத்தி, ராவத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது போலீஸ். வடிவேல புலியாக வில்லனைப் பிடித்தாரா அல்லது எலியாக மாட்டிக்கொண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.
பெரிய திருப்பங்கள் இல்லாத காட்சி நகர்தல்கள், 1960 களில் நடக்கும் கதை என்பதற்காக அது போலவே வசனம், உடை, ஒளிப்பதிவு என்று எல்லாமே 60களின் காலத்தில் இருப்பது ரசிக்கும்படி இல்லை. யுவராஜ் தயாளனின் கதையில் பெரிதாக ஒன்றுமில்லை. காட்சியமைப்புகளில் சுவராஸ்யம் இல்லை. வடிவேலுவின் காமெடியிலும் பழைய வாசனை அடித்து சிரிப்பு வர மறுக்கிறது.யுவராஜ் தயாளன் கதையை சொல்லிய விதத்தில் ஏதோ காமெடி வித்தியாசம் காட்டியிருப்பார் போலிருக்கிறது. அந்த வித்தியாசத்தை படத்தில் காட்டத் தவறிவிட்டார். மேலும் படம் முழுவதும் வரும் வடிவேல் ஒரு இடத்தில் கூட காமெடியில் சிரிக்க வைக்க முடியாதது படத்தின் பெரும் சறுக்கல்.
இம்சை அரசனின் வெற்றிக்குப் பின் இருந்தது வெறும் காமெடி மட்டுமல்ல. 2 மணி நேரத்துக்கு அழகாக சொல்லப்பட்ட கதையும், அரசியல் நையாண்டியும் கூட. சிம்பு தேவனின் பங்கு அதில் அதிகம். தெனாலியிலும் எலியிலும் அது மிஸ்ஸாவதை வடிவேலு உணர்ந்து கொள்ள வேண்டும்.
வித்யாசாகரின் இசையில் வடிவேலுவின் ஜெயில் பாட்டு மட்டும் ஓ.கே. ஆனால், பின்னணி இசை பேரிரைச்சல். நாயகி சதாவுக்கு ஆடுவதும் பாடுவதும் மட்டும் வேலை. அவரைப் போலவே வேலையே இல்லாமல் படத்தில் பல கதாபாத்திரங்கள் வருகிறார்கள் போகிறார்கள். கலை இயக்குநர் தோட்டாதரணியின் பழமையை காட்டும் செட்டிங்குகள் அருமை.
வடிவேலு முழு நீள படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடிப்பதை விட நல்ல கதையை தேர்ந்தெடுத்து இளம் வயது ஹீரோவுடன் படம் முழுக்க வரும் காமெடிக் கதாபாத்திரம் போல நடித்தால் படமும் நன்றாக வரும். அவரது காமெடி ரோலும் எடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அவரே காமெடி ஹீரோவாக நடிக்கும் பட்சத்தில் காமெடி ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பை இதுபோல் ஈடுசெய்ய முடியாமல் போகும்போது படத்தின் தோல்வியையும் தடுக்க முடியாமல் போய்விடும்.
எலி. புலியல்ல.. எலி கூட அல்ல.