கோடம்பாக்கத்தில் பேய், ஆவிகளின் நடமாட்டம் மிகுந்த தற்சமயத்தில் சூர்யாவையும் பேய் பிடித்து ஆட்டிய கதை தான் இந்த மாஸ். ஆனால் சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை என்று இல்லாமல் ஆக்ஷன் ஹீரோவுக்குரிய கதையாக மாற்ற முயற்சித்து தோல்வியுற்றிருக்கிறார் வெங்கட் பிரபு. கொஞ்சம் கோஸ்ட் டவுன், ஹாலோகாஸ்ட், ப்ரைட்டனர்ஸ் போன்ற ஹாலிவுட் பேய்ப்படங்களை பிழிந்து கொஞ்சம் ஈழத்து சோடாவும் சேர்த்த கதையை தனது ‘டேக் இட் ஈஸி’ பாலிஸி ஸ்டைலில் சொல்லி கூடவே கொஞ்சம் வில்லன்களையும் துவைத்துப் பிழிந்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஆனாலும் மாஸ்ஸில் ஜூஸ் வரவில்லை.
நார்த் மெட்ராஸ் ஏரியாவில் திருட்டுத் தொழில் செய்துவரும் மாஸ் என்கிற மாசிலாமணிக்கு ஒரு ஆக்சிடென்ட். கண்விழிக்கும் அவருக்கு சில பல ஆவிகள் மட்டும் இவர் கண்ணுக்கு தெரிகிறார்கள். அதில் நல்ல சில ஆவிகளை கூட்டு சேர்த்துக் கொண்டு பேய் விரட்டும் தொழில் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். செம கலெக்ஷன். ஏமாற்று வேலை செய்யும் இதை அறியும் காதலி நயன் கோபித்துக் கொண்டு விலகிவிட, அவரிடம் கூட உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார் மாஸ் என்கிற சூர்யா. இப்போது என்ட்ரியாவது இன்னொரு ஆவி! அது சூர்யாவின் அப்பா ஆவி.
சூர்யாவின் நண்பன் பிரேம்ஜியும் இந்த ஆவிகளில் அடக்கம். எல்லா ஆவிகளுக்கும் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. அதை கேட்டு நிறைவேற்றும் சூர்யாவுக்கு ஈழத்தமிழரான சூர்யா அவர் குடும்பத்துடன் கனடாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து கொல்லப்படுவது தெரிகிறது. அதாவது இந்தியா இலங்கையுடன் சேர்ந்து ஈழத்தமிழர்களை இங்கே அகதிகள் முகாமில் வைத்து ஆப்பு அடிப்பது போல அவருக்கும் ஆப்பு அடிக்கப்படுகிறது. மற்றபடி ஈழம் இப்படத்தில் வியாபாரம் தான்.
சூர்யாவுக்காக ஆக்ஷன் கதை என்று பேய்க்கதையை மாற்றினாலும் சூர்யாவின் நடிப்பு படத்தை நிமிர்த்தி வைக்க முடியவில்லை. இரண்டு மூன்று இடங்களில் மட்டும் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நயன்தாராவும், பிரணிதாவும் படத்தில் ஹீரோயின்கள். வருகிறார்கள். போகிறார்கள். டூயட் பாடுகிறார்கள். அவ்வளவுதான். பிரணிதாவுக்கு நடிக்க கொஞ்சூண்டு வாய்ப்பு.
சமுத்திரக்கனி பழைய கால கெட்டப்பில் வரும் வில்லன். கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள். பார்த்திபன் ஒரு போலீஸ் ஆபிசராக வருகிறார். வழக்கமான கிண்டல் நிறைந்த பேச்சுக்கள். அப்புறம் அவையே மொக்கையாகவும் மாறிவிடுகின்றன.
யுவன்சங்கர் ராஜா ஒரு மாஸ் ஹீரோவுக்காக போட்ட குத்துப் பாட்டுக்களும் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையை ஓ.கே செய்திருக்கிறார். ஆர.டி.ராஜசேகர் கேமாரவை ஆக்ஷன் காட்சிகளில் சுற்றி சுழற்றி வேலை செய்திருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் ஸ்டைல், திரைக்கதை சஸ்பென்ஸ் எல்லாம் ஓ.கே. ஆனால் அவர் இனிமேல் நல்ல கதையாசிரியர்களிடமிருந்து ஒரிஜினல் கதையை காசு கொடுத்து வாங்கியாவது படம் செய்யாவிட்டால் ‘அவர் ஒரு லூசு’ என்று தயாரிப்பாளர்கள் அவரை ஒதுக்கப்போவது உறுதி.
மாசு.. கண்ணில் விழுந்த தூசு.