கேரளாவில் மதரீதியாகப் பிளவுற்ற மிக உணர்ச்சி பூர்வமான பகுதி என்றால் அது மலப்புரம் வடக்குப் பகுதிதான். முஸ்லீம்கள் அதிகம் வாழும் (70 சதவீதம்)இப்பகுதி ஏழ்மை நிரம்பியது. கேரளாவில் இந்துத்துவ சக்திகள் வளர ஆரம்பித்ததும் மலப்புரம் இந்து முஸ்லீம் கலவரங்களுக்குப் பெயர் போனது. கேரளாவில் யாரிடம் கேட்டாலும் மலப்புரம் மிக மோசமான இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்குமிடம் எனவும், உலிமாக்களும் சௌதியிலிருந்து தாதாக்களும் மக்களை கண்ட்ரோல் செய்கிறார்கள் எனவும், பெண்களை பர்தா போடாவிட்டால் வெட்டுவார்கள் எனவும், பாம்ப் தயாரிப்பது குடிசைத்தொழில் எனவும் சொல்லக்கூடிய அளவுக்கு அதைப் பற்றி கதைகள் நிறைய பொதுப்புத்தியில் சொல்லப்படும்.
மலப்புரம் பற்றிய இந்த மூடக்கதைகளை தகர்த்தெரிந்திருக்கிறது ‘கே.எல். பத்து’ என்னும் திரைப்படம். கே.எல். 10 என்பது மலப்புரம் ஆர்.டி.ஓ. ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர். கே.எல்.10 என்கிற நம்பர் உள்ள வாகனங்களை பக்கத்து மாவட்டங்களில் பார்த்தால் போலீஸ் உடனே பிடித்து தோண்டித் துருவி தரோவாக செக் செய்துதான் விடுவார்கள். அந்த அளவுக்கு மலப்புரம் மக்களின் மேல் ‘நம்பிக்கை’.
கே.எல்.பத்தின் இயக்குனர் முஷின் பராரி எனும் புதுமுக இளைஞர். கமலின் விஸ்வரூபம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களைப் பார்த்ததும் எப்படி முஸ்லீம்களைக் கண்டால் இனம்புரியாத வெறுப்பு தோன்றியதோ அதற்கு மாறாக இப்படத்தைப் பார்த்ததும் முஸ்லீம்களின் மேல் மற்றவர்களின் பார்வை பெரிய அளவில் இணக்கமாக மாறுபடும். அவர்களும் நம்மைப் போல சராசரி மனிதர்களே என்கிற மனிதநேய உணர்வு மேலிடும்.
படத்தின் கதையும் மணிரத்னத்தின் பம்பாய் போல கான்ட்ரோவர்சியை உள்ளில் வைத்திருக்கும் கதையல்ல. ஒரு சாதாரண காதல் கதை. மலப்புரத்திலுள்ள ஒரு முஸ்லீம் பையனும், ஒரு முஸ்லீம் பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள ஒரு காரில் கிளம்பி எண்ணூர் செல்கிறார்கள். எண்ணூரில் இருக்கும் சில கம்யூனிஸ்ட் தோழர்கள் அவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தப் பையனின் அண்ணன் பின்னால் தனது நண்பர்களுடன் அந்தத் திருமணத்தைத் தடுக்க பின்னால் ஒரு காரில் கிளம்பித் தேடி வருகிறான். இதுதான் படம்.
திருமணம் செய்யப்போகும் ஜோடியும் சாதாரணமாகப் பேசியபடி, ஹோட்டல்களில் உணவருந்தியபடி, எங்கேயாவது நின்றுவிட்டுச் செல்கிறார்கள். பின் தொடர்பவர்களும் அதே போல் சாதாரணமாகப் பேசியபடியே, ஜாலியாக நண்பர்கள் அரட்டையடித்தபடி, ஜாலி, புட்பால் என்று பல விஷயங்கள் பேசியபடி அவர்களைத் தேடிக்கொண்டே வருகிறார்கள். படம் முழுக்க வெறும் கார் சேஸிங் இல்லை. மற்றபடி ஆங்காங்கே கதையோட்டத்தில் இருக்கிறது. ஆனால் இயக்குனர் படம் முழுவதும் பாத்திரங்களின் உரையாடல்களிலும், ப்ளாஷ்பேக்குகளிலும் கதையின் உயிரோட்டத்தை வைத்துள்ளார். அவர்கள் பேசும் அனைத்து விஷயங்களும், இந்து-முஸ்லீம் பிரச்சனைகள் உட்பட இஸ்லாமியர்களின் இயல்பான எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
படத்தின் ஹீரோயின் படம் முழுக்க பர்தா அணிந்து வருவார். ஆனால் அவர் பிற்போக்கான படிக்காத பெண்ணல்ல. அரசியல் முதல் சினிமா வரை எல்லாவற்றையும் அலசும் புத்திசாலிப்பெண். படத்தில் காட்டப்படும் இஸ்லாமியரின் வண்ணங்கள், சூபி இசை, கட்டிடக்கலை, கவிதை என்று இஸ்லாமியக் கலவையில் அவர்களின் கலாச்சாரத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார் இயக்குனர். கேரளாவின் காடுகள், மலைகள், உணவுகள், இசை, கால்ப்பந்தாட்டம், பிறழாய் காட்டப்படும் மதஉணர்வுகள் என்று எல்லாவற்றையும் அருமையாக இணைத்து மலப்புரம் முஸ்லீம்கள் மீது மீடியாவினால் பதியப்பட்ட ஒரு தவறான பிம்பத்தை இப்படம் கலைத்துப் போட்டு உண்மையான பிம்பத்தின் கோடுகளைக் காட்ட இத்திரைப்படம் முயற்சிசெய்கிறது.
தமிழில் இதுபோன்ற தத்துவார்த்த ரீதியான வகையில் வாழ்க்கையை அலசும் படங்கள் மிகச் சொற்பமே. அன்பே சிவம் அதில் ஒன்று. முஷின் பராரி அந்த வகையில் தனது முதல் படத்திலேயே மலையாளச் சினிமாவை மிக உயர்ந்த இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் எனலாம்.