விஜய் சேதுபதியின் முதல் மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றபோது  நடிப்போடு சேர்ந்து அவரது கதை தேர்வு செய்யும் புத்திசாலித்தனமும் சிலாகிக்கப்பட்டது. அடுத்தடுத்த படங்களின் பரிதாப தோல்வி அக்கதைகள் தற்செயலாக அமைந்தவை என்பதை உணர்த்த, தற்போது ரிலீஸாகியிருக்கும் `ஆரஞ்சுமிட்டாய்` விஜய் சேதுபதி எந்தவகையிலும் விஷேசமானவரல்ல, அவர் மற்ற நடிகர்களைப் போல் கதை தேர்விலும், நடிப்பிலும் சுமார் மூஞ்சிகுமாரே என்பதை தெளிவாகப் படம் போட்டுக்காட்டியிருக்கிறது.

அவரது கதை அறிவைப்பற்றிப் பேசவேண்டிய காரணம்? `ஆரஞ்சுமிட்டாய்` படத்தின் கதையே விஜய்சேதுபதியின் பெயரில்தான் வருகிறது.

டைட்டிலில் கதை என்று விஜயசேதுபதியின் பெயரில் போடுகிறார்களே தவிர 101 நிமிடங்களே ஓடும் அப்படத்தில் அப்படி என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. சில காட்சிகள், அதுவும் என்ன சொல்லவிரும்புகிறார்கள் என்று சாதாரண ஜனங்களால் விளங்கிக்கொள்ள முடியாத  காட்சிகள் மட்டுமே இருக்கின்றன.

ஒரு கிராமத்தில் ஒண்டிக்கட்டையாக வசித்துவரும் பெரியவர் விஜய்சேதுபதி, மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்சை வரவழைக்கிறார். ஆம்புலன்சில் வரும் ரமேஷ் திலக்கையும்,டிரைவர் ஆறுமுகத்தையும் தன்னைவிட்டுக்கிளம்பிவிடாமல், கூட வைத்துக்கொண்டே, ஒரு நாள் முழுக்க அவஸ்தை கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மகனால் கைவிடப்பட்ட தந்தை என்று தெரிய வருகிறது. `எங்க தாத்தனை எங்க அப்பன் கைவிட்டான். எங்க அப்பனை நான் கைவிட்டேன் இப்ப என்னை என் மகன் கைவிட்டுட்டான்` என்று சோகம் பொழிய, அவரை தந்தையாக பாவித்து ஆம்புலன்ஸ் சர்வீஸோடு அப்பா என்று அணைக்கவும் செய்கிறார் ரமேஷ் திலக்.

இதெல்லாம் ஒரு கதையா என்று நீங்கள் கேட்க விரும்பினால் விஜய் சேதுபதியையும் இயக்குநர் பிஜு விஸ்வநாத்தையும்தான் கேட்கவேண்டும்.

சொந்தப்படம் என்பதாலோ என்னவோ ஒரு குறும்படத்துக்கு உண்டாகும் செலவுகள் கூட செய்யாமல் அத்தனை சிக்கனமாக எடுத்திருக்கிறார் சேதுபதி.

60 வயது முதியவராக நடிக்க முடிவு எடுத்தவுடன் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் எவ்வளவு மெனக்கெட்டிருக்கமுடியும்? ஆனால் ஸ்கூல் டிராமா மாணவர்களையும் விட மலிவான ஒரு மேக்கப்பில்,அதுவும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக வந்து ரசிகர்களை சோதிக்கிறார் சோதுபதி.

இயக்கத்துடன் நிற்காமல் படத்தை எடிட் செய்வது, ஒளிப்பதிவு செய்வது, ஒளித்துக்கட்டுவது உட்பட பலவேலைகளை கனகச்சிதமாக முடித்திருக்கிறார் பிஜு. வெல்டன் விஸ்வநாத்.

டைட்டிலுக்கு யாராவது காரணம் கேட்டுவிடுவார்களோ என்பதற்காக ஒன்றிரண்டு காட்சிகளில் விஜய்சேதுபதி ஒரு டப்பாவிலிருந்து ஆரஞ்சு மிட்டாய்கள் சாப்பிடுகிறார்.

கதாநாயகி இல்லை,சண்டை ,கிளாமர் இல்லை,மற்ற மசாலா சமாச்சாரங்கள் இல்லை என்று கமர்ஷியல் படத்துக்கான எந்தவித சமரமும் இல்லாமல் ஒரு படம் முயற்சித்திருக்கிறார்கள் என்பது தாண்டி `ஆரஞ்சுமிட்டாய்` வரவழைப்பது கொட்டாவிதான். அதுவும் 101 நிமிட நீண்ட கொட்டாவி.

Related Images: