கொஞ்சம் ’புதுப்பேட்டை’, இன்னும் கொஞ்சம் ’ஆடுகளம்’ அடுத்து கொஞ்சம் பத்துப்பைசா பெறாத கற்பனைக்களம் என்று மாறி மாறிக் குதறி இந்த மாரியை கதை பண்ணியிருக்கிறார்கள்.

அனாதையாக வளர்ந்த தனுஷ் சென்னையின் ஒரு பகுதியை கட்டி ஆண்டுகொண்டு புறாப் பந்தயங்கள் நடத்தி வருகிறார். யாராவது அவரது அடாவடித்தனத்துக்கு குறுக்கே நின்றால் ‘செஞ்சு விட்டுருவேன்’ என்று பஞ்ச்சு விடுகிறார். கதாநாயகி காஜல் அகர்வால் அந்த ஏரியாவுக்கு குடிவரவேண்டுமே? வருகிறார். அவருடன் டூயட் பாடுவதை விட்டுவிட்டு மாமூல் கேட்கிறார் தனுஷ்.

இருவருக்கும் மோதல் வர, ஏரியா இன்ஸ்பெக்டரின் கைப்பாவையாக மாறி தனுஷை ஆதாரத்துடன் மாட்டிவைக்கிறார் காஜல். ஜெயிலுக்குப்போய் திரும்பும் தனுஷ்…அட போங்க பாஸ்… இது ஒரு கதைன்னு எழுதுறப்பவே பத்திக்கிட்டு வருது…

ஒரு சுமாரான ‘காதலில் சொதப்புவது எப்படி?’க்குப் பிறகு ‘வாயை மூடிப்பேசவும்’ என்ற மரண மொக்கை கொடுத்த பாலாஜி மோகனை எதன் அடிப்படையில் தனுஷ் தேர்வு செய்தார் என்பது அந்த ‘மாரி’யாத்தாளுக்கே வெளிச்சம். வெறுமனே தனுஷுக்கு பில்ட்-அப் கொடுத்தே தப்பி
விடலாம். டைரக்டராக வேறு எந்த மெனக்கெடலும் செய்யவேண்டியதில்லை என்பதில் அநியாயத்துக்கு பிடிவாதமாக இருந்திருக்கிறார் பீலாஜி மோகன்.

சமீப காலமாய் ‘அநேகன்’ ‘ஷமிதாப்’ ‘வேலை இல்லாப்பட்டதாரி’ என்று வரிசையாக பட்டையக் கிளப்பிக்கொண்டிருந்தாரே தனுஷ் அவர் இந்த ‘மாரி’யில் படம் முழுக்க மிஸ்ஸிங். மினி கிங்ஸ் சிகரட் சைஸில் இருந்துகொண்டு படம் முழுக்க ஊதித்தள்ளிக்கொண்டே இருப்பதெல்லாம்
அராஜகத்தின் உச்சம்.நாயகி காஜல் அகர்வால், தெரியாமல் மட்டன் கடைக்கு வந்துவிட்ட அய்யர்வாள் மாதிரி, தனது ரோல் என்னவென்று தெரியாமல் பரிதாபமாக முழிக்கிறார்.

முக்கிய வில்லன் வேடத்தில் பாடகர் விஜய் ஜேசுதாஸ். தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’ என்ற பழமொழிக்கு இப்படி வேறு யாரும் உயிர்கொடுத்துவிட முடியாது. நல்லவன் கெட்டவனா மாறுவான் அவனை நம்பக்கூடாது , ஆனா கெட்டவன் கெட்டவனா இருந்தாலும், தொடர்ந்து கெட்டவனாவே இருக்கிறதால அவனை நம்பலாம்’ என்பது போன்று குதர்க்கமாக சொல்லமுயன்றிருக்கிறார் திருவாளர் பீலாஜி மோகன்.

மாரி….சோ…. மாரி..

Related Images: