தனது அரசியல் பிரவேசம் குறித்து இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் தானும் குழம்பி மற்றவர்களையும் தெளிவாகக் குழப்பி வரும் ரஜினி வரும் தனது பிறந்தநாளன்று ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினரை சந்திப்பதைத் தவிர்க்கும் பொருட்டு இமயமலைக்கு எஸ்கேப் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே தனது பிறந்தநாளை 10 நாட்கள் முன்னதாக நேற்றே கொண்டாடினார்.

வரும் டிசம்பர்12ம் தேதியன்று ரஜினி தனது 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.இவரது 167-வது படமான தர்பார் வருகிற பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது. இதை தொடர்ந்து ரஜினியின் 168-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ரஜினி தனது 70-வது பிறந்தநாளை வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாட இருக்கிறார். அதை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது நட்சத்திர பிறந்தநாளை நேற்று தனது வீட்டில் கொண்டாடியுள்ளார். நேற்று தன்னுடைய பிறந்த நட்சத்திரமான திருவோணம் நாள் என்பதால், இதற்காக வீட்டில் சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகள் பிறந்தநாளை ஒட்டி எழும் என்பதால் அவர் இன்னும் ஓரிரு தினங்களில் இமயமலைக்கு மூட்டையைக் கட்டுவார் என்று நம்பப்படுகிறது.

Related Images: