Director Manikandan, Vijay Sethupathi @ Kadaisi Vivasayi Working Stills


இயக்குனர் மணிகண்டன் தனது ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்கள் எடுத்துக் கொண்டு தனது அடுத்தப் படமான ‘கடைசி விவசாயி’யை இயக்கி முடித்து விரைவில் வெளியிடவும் இருக்கிறார்.

விவசாயத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டனுடன் உரையாடியபோது..

கடைசி விவசாயி படத்தில் விவசாயிகளின் வாழ்க்கை பிரதிபலிக்கிறதா ? கதை என்ன ?

“விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு.

ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. கிராமத்தில் 20 வருடங்களாக குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது என்று தெரியவந்து அதை கும்பிட ஊர் தயாராகும். குலதெய்வம் கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று.

20 வருடமாக குலதெய்வத்தை கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இருக்காது. அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 85 வயது மதிக்கத்தக்க பெரியவர், அவருக்கு காதும் அவ்வளவாக கேட்காது. அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார்.

அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.

ரொம்ப சீரியசான படமோ ?

அப்படியில்லை. கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாக சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்துக் கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.

உசிலம்பட்டியில் படமாக்கியிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். ஏன் உசிலம்பட்டி பகுதியை தேர்ந்தெடுத்தீர்கள்?

உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான்.  அவர்களை கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள்.
கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துருக்கு. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்” .

படத்தின் இசை இசைஞானி இளையராஜா பற்றி.

கிராமிய மணம் கமழும் இசையை இப்போதும் நமக்கு கொடுக்க இளையராஜா மட்டுமே இருக்கிறார். கதையின் போக்கை அவர் உள்ளுணர்ந்து இசையை கதையோடு சேர்த்து நெய்வது போல நேர்த்தியாக கணக்கற்ற படங்களில் தந்துள்ளார். இப்படத்தையும் அப்படி தன் இசையால் உயிரூட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா அவர்கள்.

படத்தின் கலை இயக்குனர் தோட்டாதரணி பற்றி.

படத்திற்கு கலை இயக்குநராக மிக்க அனுபவம் வாய்ந்த தோட்டாதரணி பணிபுரிந்துள்ளார். படத்தின் களம் கிராமம் என்றாலும் அதில் நீதிமன்றம், கோவில் திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளோம்.

இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான அரங்குகளில் கூட நேரடி ஒலிப்பதிவிலேயே இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒலிப்பதிவாளரின் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

2020 ஜனவரி பொங்கல் விருந்தாக வரவிருக்கும் இந்த ‘கடைசி விவசாயி’ சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. விவசாயம் வெறும் தொழிலல்ல அது கோடான கோடி மக்களை வாழவைக்கும் ஒரு வாழ்வியல் முறை என்பதை மக்களுக்கு உணர்த்தும் இது போன்ற படங்கள் நிறைய வரவேண்டும்.

Related Images: