‘இந்தியன் 2’ படத்தின் போஸ்டர் ஒன்றை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்ததால் ‘அது எங்க போஸ்டர் இல்லே’என்று தயாரிப்பு நிறுவனமான லைகா விளக்கம் அளித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கமல் ஓய்வில் இருப்பதால், படப்பிடிப்புக்குக் கொஞ்சம் இடைவெளி விடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்றே, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுவிட்டது படக்குழு. அதில் கமலின் லுக் படத்தில் எப்படியிருக்கும் என்பதைக் காட்டிவிட்டது படக்குழு. மேலும், இதுவரை சுமார் 5 போஸ்டர்கள் வரை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ‘இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டர் என்ற தலைப்பில் பலரும் போஸ்டரைப் பகிர்ந்தார்கள். அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. என்னவென்றால் கமல் உட்கார்ந்திருப்பதன் பின்புறம், 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தியும் அந்த டிசைனில் இடம் பெற்றிருந்தது. அது 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொகை என்பதால், இந்தப் படம் அந்த மோசடியின் பின்னணி என்றெல்லாம் பதிவுகளைக் காண முடிந்தது.
அதைக்கண்டு கொதித்த திமுகவினர் ஜெயலலிதாவை விட தற்போது ஆளும் அதிமுகவிட பெரிய ஊழலையா எங்கள் கட்சி செய்துவிட்டது என்று கொந்தளித்தனர். அது மேலும் பெரிய விவாதமாக உருவாகும் முன்பு முடிக்க வேண்டும் என்று நினைத்து லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் “இந்த ‘இந்தியன் 2’ போஸ்டர் அதிகாரபூர்வமானது அல்ல. தயாரிப்பு நிறுவனமோ, இயக்குநரோ அவரது குழுவோ இதை உருவாக்கவில்லை.யாரோ எங்களுக்கு சம்பந்தமில்ல்லாத ஒருவர் தயாரித்த டிசைன் அது என்று முற்றுப்புள்ளி வைத்தது.அந்த பயம் இருக்கட்டும் என்று தற்போது கமெண்ட் அடிக்கின்றனர் கலகக்கண்மணிகள்.