பேசப்படுகிற வார்த்தைகளை விடவும்,பேசப்படாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் அதிகம்! கடந்த ஓராண்டாக ரஜினி தன் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு, தன்னோடு அரசியலில் ரஜினி இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி வருபவர் கமலஹாசன்!
கோமாளி படத்தில்,ரஜினியின் முடிவில்லா அரசியல் பிரவேச அறிவிப்பு தொடர்பான ஒரு நியாயமான நையாண்டியைக் கூட,கண்டித்து அறிக்கை வெளியிட்டு ,படத்திலிருந்து எடுக்கச் செய்தவர் கமலஹாசன்!அப்படிப்பட்ட கமலஹாசன்,தற்போது,ரஜினி ஒரு இக்கட்டான நிலையில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில்,…ஏதோ இந்த உலகத்திலேயே தான் இல்லாதிருப்பது போல ஆழ்ந்த மெளனம் சாதிக்கிறார் ஏன்?
தன் நாற்பது ஆண்டுகால நண்பரைப் பற்றி கமலுக்குத் தெரியாதா? நண்பர் தவறாகப் பேசினார் என்று கருதுவாரென்றால், அவருக்கு உடனடியாக எடுத்துச் சொல்லி,விளங்க வைத்திருக்கலாம்! கமலும் தன்னை நாத்திகனாகச் சொல்லிக் கொள்வதால் பெரியார் பற்றிய கூடுதலான புரிதல் கமலுக்கு இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
அப்படி விளங்க வைத்திருப்பார் எனில்,ரஜினி அவர்கள், ’’மீண்டும் நான் சொல்லியதில் தவறில்லை என சொல்லியதற்கு மாறாக, சில வார்த்தைகளை நான் கவனக் குறைவாகப் பேசிவிட்டேன். நான், சோவை பெருமைப்படுத்த ஏதோ பேசினேயன்றி,பெரியாரை அவமரியாதை செய்யும் நோக்கம் எனக்கில்லை’’ என்று கூறியிருப்பாரென்றால்,பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும். இப்படிச் சொல்லித் தருவதற்கான ஆள் யாரும் ரஜினி கூட இல்லை என்பது தான் அவரது பிரச்சினைகளுக்கான காரணமே!
கமலஹாசனின் மெளனத்தை பார்க்கும் போது, ’நான் பேச நினைத்து…ஆனால், பேசினால் பிரச்சினையாகுமென்று தவிர்த்ததைத் தானே அவர் பேசியிருக்கிறார், நல்லது தான்’ என்று நினைக்கிறாரோ எனத் தோன்றுகிறது. பொதுவாக மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தான் கருதப்பட்டு வருகிறது.அப்படியெனில்,இந்த கள்ளமெளனம் மிக ஆபத்தானது…!
உண்மையிலேயே கமலஹாசன், நேர்மையான அரசியலை முன்னெடுப்பவர் என்றால், இது தான் அவர் தன்னை சரியாக வெளிப்படுத்தியிருக்க வேண்டிய தருணம்! ஒன்று,’’ரஜினி பேசியது சரிதான்! அதில் தவறில்லை, நான் ரஜினி நிலைபாட்டில் உடன்படுகிறேன்’’ எனக் கூறியிருக்க வேண்டும். அல்லது,சமூக நீதியை போற்றும் அரசியல் நிலைபாடு எடுத்து,
’’பெரியாரை கடவுள் எதிர்ப்பாளர் என்ற சிறிய சிமிலுக்குள் அடக்கமுடியாது.அதையும் கடந்து இங்கே வைதீக மதத்தால் அழுத்தப்பட்டு,அடிமைப்பட்டிருந்த மக்களின் எழுச்சிக்காகவும்,சமத்துவத்திற்காகவும் தான் கடுமையாக வெளிப்பட்டவரேயன்றி, எதிர்க்கப்பட வேண்டியவரல்ல. பெரியாரின் போராட்ட அணுகுமுறைகளில் எனக்கு உடன்பட முடியாவிட்டாலும் அவரது சமநீதிக் கொள்கையில் நான் முழுமையாக உடன்படுகிறேன்…’’ என்று விளக்கமளித்திருக்க வேண்டும்! கமலஹாசன் எந்த நிலையென்று தன்னை வெளிப்படுத்தாமல், கமுக்கமாக ’மையமாக’ நின்று கள்ளமெளனம் காட்டுகிறார் என்றால், இந்த மெளனம் ஆபத்தானது, ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது என்றே புரிந்து கொள்ளப்படும்!
முகநூலில்…பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்