–
பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
புத்தகத்தின் பெயர் Shadow Armies. தமிழில்: நிழல் இராணுவங்கள். மொழி பெயர்ப்பாளர்: இ.பா.சிந்தன். பதிப்பகம்: எதிர் வெளியீடு.
இதில் எட்டு இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஆசிரியர் பல மாதங்கள் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
- சனாதன் சன்ஸ்தான் 2. ஹிந்து யுவவாஹினி
- பஜ்ரங் தள்
- ஸ்ரீ ராம சேனா
- ஹிந்து ஐக்கிய வேதி 6. அபினவ பாரத்
- போன்சாலா மிலிட்டரி ஸ்கூல்.
- ராஷ்ட்ரீய சீக் சங்கட்
ஒவ்வொரு அமைப்பைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் நம்மை அசரவைக்கின்றன.
வெறும் தகவல்கள் மட்டுமல்ல… ஒவ்வொரு இயக்கத்தின் நோக்கங்களும், செயல்பாடுகளும்… அதற்காக சமூகத்தில் அவர்கள் குறி வைக்கும் பகுதியினர்… திட்டமிடலும், நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே பல ஆண்டுகள் காத்திருப்பதும்…
இப்படி இப்புத்தகத்தில் விரவி கிடக்கும் எண்ணற்ற விசயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமல்ல… ஒரு வித அச்ச உணர்வுக்கும் நம்மை இட்டு செல்லுகிறது.
அதே வேளையில் நமது பணியினை அதிகரிக்க வேண்டியதன் தேவையையும் நம்முள் ஏற்படுத்தும் விதமாகவும் இப்புத்தகம் உள்ளது.
உதாரணத்திற்கு சீக்கிய மதத்தை நீர்த்து போகச் செய்து இந்து மயமாக்கப்படுவதற்காகவே ஆர்.எஸ்.எஸ்…ஆல் உருவாக்கப்பட்டது தான் இராஷ்டீரிய சீக் சங்கட்.
1986 ல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு முதலில் அயல் நாடுகளில், அண்டை மாநிலங்களில் வாழும் சீக்கியர்கள் மத்தியில் மட்டும் செயல்பட துவங்குகிறது.
பஞ்சாபிற்குள் செயல்படுவதற்கான தகுந்த சூழலுக்காக காத்திருக்கிறது அவ்வமைப்பு.
1997ல் அகாலிதள் – பிஜேபி கூட்டணி உருவாகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி குரு கோவிந்த் சிங் ‘கால்சா’ என்ற அமைப்பை உருவாக்கி 300 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடுவதற்காக யாத்திரை ஒன்றை நடத்துகிறது இராஷ்டிரீய சீக் சங்கட்.
ஆனால் அதன் உண்மையான நோக்கம் சீக்கியம் இந்து மதத்தின் அங்கம் தான் என்பதனை பிரச்சாரம் செய்வதே.
‘இராமரும், கிருஷ்ணனும் குரு சாகிபானும் வேறு வேறல்ல’ என துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிப்பதும் ‘இந்து கோவில்களில் குரு கிரந்த சாகிபை ஒதுவது’ என்ற முடிவுக்கு செல்வதுமாக அவ்வமைப்பின் பணிகள் மெல்ல, மெல்ல விரிவடைந்த பொழுது சீக்கிய அமைப்புகள் விழித்துக் கொண்டன.
‘தோற்றத்தில் ஒளரங்கசீப்பை போன்றது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும்.
கத்திமுனையிலோ அல்லது வேறு வழியிலோ இசுலாம் மதத்திற்கு அனைவரும் மாற வேண்டும் என ஒளரங்கசீப் விரும்பினார்.
அதே போன்று எல்லாரையும் இந்து மதத்திற்கு மாற்ற விரும்புகிறது ஆர்.எஸ்.எஸ்.
அதன் சித்தாந்தம் சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதங்களுக்குமே ஆபத்தானது தான்’ எனக் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார் சீக்கிய மதத்தின் பிரதான மடமான அகால் தக்த்தின் தலைமை மதகுரு ஜோகிந்தர் சிங் வேதாந்தி.
உடனே தன் செயல்பாடுகளை இராஷ்டிரீய சீக் சங்கட் நிறுத்திக் கொண்டது.
மீண்டும் 2004 ல் இதே போன்றதொரு முயற்சியை மேற்கொள்கிறது
சீக் சங்கட்.
இம்முறையும் கடுமையான எதிர்ப்புகள். உடனை ஆர்.எஸ்.எஸ் சின் சீக்கிய பிரிவு இராஷ்டிரீய சீக் சங்கட்டை கண்டித்து அறிக்கை வெளியிடுகிறது.
மீண்டும் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்கிறது.
இப்படிப்பட்ட போக்கு இன்று வரை நீடிக்கிறது.
தான் விரும்பாத அமைப்பின்/மதத்தின் கோட்பாடுகளை செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்து எதிர்ப்பது ஒரு வகை.
ஆனால் அவைகளை வணங்கியோ அல்லது அவைகளுக்கு விழாக்கள் எடுத்துக் கொண்டாடிக் கொண்டோ அவ்வமைப்புகளின்/மதங்களின் நோக்கங்களை, செயல்பாடுகளை திரித்துக் கூறி சிதைப்பது மற்றொரு வகை.
இது நயவஞ்சகமான வழி. இதை தான் ஆர்.எஸ்.எஸ் செய்கிறது. இதற்கான சான்றுகள் பல இடங்களில் இப்புத்தகத்தில் உள்ளது.
மங்களுரில் உள்ள சிறுபான்மையினரின் கடைகளை முதலில் பஜ்ரங் தள் தாக்கும். பிறகு, ஈஸ்வரி மேன்பவர் ஆட்கள் அவர்களை அணுகி பாதுகாப்பு அளிப்பதாக சொல்வார்கள்.
நீங்கள் ஒப்புக்கொண்டால், பாதுகாவலர்கள் அனுப்பப்படுவார்கள். அந்தப் பாதுகாவலர்கள் பஜ்ரங் தள்ளைச் சார்ந்தவர்கள்.
அவர்களை அனுப்பிவைப்பது பஜ்ரங் தள் அமைப்பாளர்!! அதாவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் அவர்களே.. பாதுகாவலர்களை அனுப்புவதும் அவர்களே..
முதல் அத்தியாயம் சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பு பற்றியது. தபோல்கர், கால்புர்கி, பன்சாரே போன்ற பகுத்தறிவுவாதிகளின் கொலைகளில் தொடர்புடைய அமைப்பு.
கோவாவில் இந்த அமைப்பின் தலைமையகம் உள்ளது. தீவிரவாதத்தில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருவதை இப்பகுதி மக்கள் மெல்ல மெல்ல புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சமயம் குண்டு முன்கூட்டியே வெடித்துவிட்டதால் சன்ஸ்தாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இறந்துவிட்டார்கள்.
சன்ஸ்தாவை நடத்தி வருபவர் ஜெயந்த் பாலாஜி அதாவலே என்பவர். ஒரு கட்டுரையில் அவர் இப்படி எழுதியிருக்கிறார். “ஒரு கொசுவை கொன்றாலே அவ்வளவு வெற்றிகரமாக உணர்கிறீர்கள். ஒரு பாவியை கொன்றால் எப்படி உணர்வீர்கள்?”
சன்ஸ்தாவில் ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது துர்ஜனங்களை மனதில் வைத்துக்கொண்டு குறிப்பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பாவிகள் துர்ஜனங்கள் என்று இவர்கள் சொல்வது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை, பகுத்தறிவுவாதிகளை மற்றும் கம்யூனிஸ்டுகளை தான்.
வட இந்தியாவில் பல சன்ஸ்தாக்கள் இருக்கின்றன. எல்லோரும் அதாவலேவின் தலைமையை ஏற்றுக்கொண்டாலும் எல்லா சன்ஸ்தாக்களும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
காரணம், எதன் மீதாவது எதாவது வழக்கு வந்தால் கூட மற்றொரு அமைப்போ அதாவலேயோ தப்பிக்கலாம் என்பதுதான். கோவாவில் சன்ஸ்தாவின் ஆசிரமத்தை வெளியேற்ற வேண்டும் என்று உள்ளூர் மக்கள் பல வருடங்களாக போராடி வருகிறார்கள். அவர்களை மௌனமாக்க பல வழிகள். பல வழக்குகள்.
2010ல் கோவா காவல்துறை அறிக்கை ஒன்று சன்ஸ்தா தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி, இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டால் நாட்டின், மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்கிறது. இன்று வரை பதில் இல்லை.
போன்சாலா இராணுவப் பள்ளி குறித்து…
இப்பள்ளியை துவங்கும் முன் மூஞ்சே இத்தாலிக்கு சென்று முசோலினியை சந்தித்தது குறித்து…
இப்பள்ளியை துவங்க யார் யார் நிதி அளித்தார்கள் என்பது குறித்து…
இன்றும் அங்கு அளிக்கப்படும் இராணுவ பயிற்சி குறித்து…
இங்கு பயிற்சி எடுத்தவர்கள் தான் மாலேகான் குண்டுவெடிப்பில், ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்பது குறித்து… இப்படி ஏராளமான விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.
ஆர்.எஸ்.எஸ் சின் செயல்பாடுகள் குறித்து அறிந்துக் கொள்ள விரும்புவோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
➖➖➖➖➖➖➖➖
பகிர்வு : A. ராஜ் பாபு,
முன்னாள் மாவட்டச் செயலாளர், TNGEA, திருச்சி.
………………………………………