ஈழத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் நூலாசிரியருமான திருநாவுக்கரசு அவர்கள், கொரோனா காலத்திற்குப் பின் உலக அரசியல் போக்கில் தோன்றும் மாறுபாட்டுப் போக்குகளை ஈழத்தை முன்வைத்து இக்காணொலியில் ஆராய்கிறார்.

இன்று எந்த ஒரு நாட்டின் அரசியல் பிரச்சனையும் தனியே அந்த நாட்டை மட்டும் பொறுத்ததல்ல. உலகளாவிய வலைப்பின்னலில் அந்த நாட்டின் இடம், அது ஏற்படுத்தும் முடிச்சுக்கள், அந்த முடிச்சுக்களை அவிழ்த்தல் என்பது அந்த வலைப்பின்னலின் போக்கைப் பொறுத்ததேயன்றி தனிப்பட்ட நாட்டின் கையில் மட்டுமே அது தரப்படுவதல்ல என்கிறார்.

ஒரு காலனிய விடுதலை மிக மிக நிச்சயமாக என்றாவது ஒரு நாள் அடையப்பட்டே தீரும். ஆனால் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலை என்பது இந்த பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் அவ்வளவு எளிதாக அடையப்படக் கூடியதல்ல என்பதை தெளிவு படுத்துகிறார். தேசிய இனத்தின் விடுதலைகள் ஒடுக்கப்படுவதோடு மட்டுமன்றி தோல்வியடையவும் சாத்தியங்கள் உள்ளன என்கிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான உலக ஒழுங்கில் நாடுகள் அமெரிக்கா அல்லது ரஷ்யா என ஏதாவது ஒன்றைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலையைச் சார்ந்தே அந்நாடுகளின் பிரச்சனைகள் கையாளப்பட்டன.

சீனா பனிப்போரின் பின்னான காலத்தில் தனது உலக ஆதிக்கப் பரவலை ராணுவ ஆதிக்கத்தின் மூலமாகவோ, பொருளாதார மிரட்டலின் மூலமாகவோ அன்றி நாடுகளுடனான பொருளாதார உறவுகளை பரஸ்பரம் பலப்படுத்தியதன் மூலமே சாதித்துள்ளது.

உலகில் உள்ள ஐந்து பெருங்கடல்களில் இந்தியப் பெருங்கடல் உலக அரசியலை நிர்ணயிக்கும் போக்கு தற்போது வலுவடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலை யார் கட்டுப்படுத்துவது என்பதையொட்டி மீண்டும் ஒரு இருதுருவ அரசியல் உலக அளவில் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை வரலாற்று ரீதியாக ஊகிக்கிறார்.

சீனாவின் ‘one road. one belt’ திட்டம் இந்தியப் பெருங்கடலில் அதன் வல்லாதிக்கத்தை வலுவாக ஊன்றியிருக்கிறது. சீனா-பாகிஸ்தான்-இலங்கை-கேமன்தீவுகள்-மியான்மர்-சீனா என்கிற நாடுகளை இணைக்கும் மாலை போன்ற வடிவமுடைய இணைப்பே சீனாவின் one road – one belt திட்டத்தின் நோக்கமாகும். இந்த மாலை போன்ற வலையப் பாதைக்குள் அடைபட்டிருப்பது இந்திய நாட்டின் நிலப்பரப்பே.

சீனாவின் இந்த உலகை நோக்கிய அரசியலுக்கு எதிர் துருவமாக அமெரிக்கா நிற்கிறது. ஏனெனில் தொழில் போட்டியில் சீனாவுடன் தோற்றுப் போய்க்கொண்டிருக்கும் அமெரிக்கா தன்னை உலக அரங்கில் சர்வ அதிகாரமும் படைத்த வல்லரசாக காட்டிக் கொண்டே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது இதுவரை. அதை சீனாவின் இந்த பெல்ட் திட்டம் தகர்க்கவிருக்கிறது.

சீனா-பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கப் போகும் கூட்டணியில் இந்தியா முக்கிய பங்குதாரராக இருந்தேயாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதாவது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா, சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போரில் பகடைக்காயாக ஆடப்படுவது தவிர்க்கப்பட முடியாதது என்கிறார்.

கீழே ஆய்வாளர் திருநாவுக்கரசுவின் உரைக் காணொலியைக் காணுங்கள்.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.