படத்தின் தலைப்பே கொஞ்சம் விநோதமாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு கூடுதல் தகவல் இயக்குநர் பெயர் நிஷாந்த் கலிதிண்டி
இந்த இரண்டுமே இப்படி இருக்கிறதே என்று படம் பார்க்கத் துவங்குகையில் ஒவ்வொரு கேரக்டரின் பெயரும் உலகின் எந்த மூலையிலும் கேள்விப்படாதவைகளாக ஒலிக்கின்றன.
ஒரு தமிழக தந்தையாகப் பட்டவர் கேரள எல்லையில் கொல்லப்பட்ட வகையில் அக்கொலைக்குப் பழிக்குப்பழிவாங்க அவரது இரண்டு பிள்ளைகளும் மூன்றாவது பிள்ளையையும் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் தாங்களும் கன்ஃபியூஸ் ஆகி நம்மையும் பெருங்கன்ஃபியூஷனுக்கு ஆளாக்குவதே இப்படத்தின் ஒன்லைன்.
சுயாதீனப்படம் என்று சொல்லப்படுகிற இப்படத்தை இயக்கிய நிஷாந்த் கலிதிண்டி யாரிடமும் உதவி இயக்குநராக வேலை செய்யாமல் நேரடியாகக் களத்தில் குதித்திருக்கிறார். நடிகர்கள் ஏறத்தாழ அத்தனை பேருமே புதுமுகங்கள்.. இயக்குநர் குமாரராஜா தியகரானால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார் போல. அவரைப்போல எதோ செய்ய முயன்று பரிதாபமாகத் தோற்றிருக்கிறார்.
முதல் பாதி இப்படி ஒரு பெரும் சோதனையாக இருக்க இரண்டாவது பாதியில் அங்கங்கே சில சிரிப்பலைகள் தோன்றுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக க்ளைமேக்ஸ் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
படத்துக்கு பக்கபலமாக இருக்கட்டுமே என்று கட்டியங்காரன் ஸ்டைலில் துவக்கத்திலிருந்தே வாய்ஸ் ஓவர் கொடுத்து இறுதிக்காட்சியில் லேசாக தலையையும் காட்டியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அவரது உதவியால் எந்த உபயோகமும் இல்லை என்பதே நிதர்சனம்.
டைட்டில் வைத்தபடி படத்தின் இறுதிக்காட்சியில் பிரியாணியும் சாப்பிடுகிறார்கள்.