வாரத்துக்கு பத்துப தமிழ்ப் படங்கள் வரை ரிலீஸாகிற இந்த சூழலில் பேய்களுக்கான இட ஒதுக்கீட்டையும் கொடுத்துத்தானே ஆகவேண்டும் என்கிற பரந்த எண்ணத்துடன் நவீன் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இந்த ‘உத்ரா’. அது என்ன உத்ரா? சாட்சாத் பேயின் திருநாமமேதான்.

கதை? பேய்ப்பட பிரியர்கள் சாதாரணமாக யூகித்துவிட முடிகிற கதைதான்.

வட்டப்பாறை என்கிற மலை கிராமம். அங்கே வாழ்கிற பழங்குடியின மக்களுக்கு ஒரு விநோதமான பிரச்சினை. திருமணம் செய்துகொண்ட மணமக்களை உத்ரா என்கிற நம்ம பேய் முதலிரவில் பால் சொம்பு மணமகள் கையிலிருந்து மணமகன் கைக்கு மாறும் அந்த நொடியில் வாட்டர் கிராஃபிக்ஸ் எஃபெக்டில் வந்து அடித்துக்கொன்று விடுகிறது. ஆக அவர்களுக்கு வாரிசு உருவாகும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ஆண்கள் இரவில் வீடுதங்காமல் ஊர் எல்லையில் படுத்துக்கொள்கிறார்கள்.

இந்த சமயத்தில் மூன்று இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வட்டப்பாறையின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு நல்லெண்னத்தோடு திரையில் தட்டுத்தடுமாறி ஆஜராகிறார்கள். துவக்கத்தில் ஊர் மக்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கினாலும் அவர்களது நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கிறார்கள். அந்த 6 பேரின் இடைவிடாத முயற்சியில் ‘ உத்ராவுக்கு நடந்தது என்ன என்ற ஃப்ளாஷ்பேக் தோண்டி துருவப்பட்டு, தலைமறைவாக இருக்கும் வில்லன் கண்டுபிடிக்கப்பட்டு ஒருவழியாக க்ளைமாக்ஸ். அது என்ன என்பது சஸ்பென்ஸ்.

படத்தில் முதலில் கவனம் ஈர்ப்பவர் உத்ராவாக நடித்திருக்கும் ரக்‌ஷாராஜ். ’வருஷம் 16’ குஷ்புவின் ஒன்றுவிட்ட தங்கச்சி போல் கொழுக் மொழுக் என இருக்கும் அவர் நடிப்பிலும் துடிப்பு காட்டியிருக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் எண்ட்ரி கொடுக்கும் நாயகன் விஸ்வாவுக்கு அப்பாவி வேடம். கல்லூரி மாண்வர்களாக ஆறு பேரில் மூன்று பேரை நடிக்க வைப்பதற்கு இயக்குநர் படாத பாடுபட்டிருக்கிறார் என்பதை பல இடங்களில் புரிந்துகொள்ள முடிகிறது.

க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் அம்மனாக, வழக்கமான கேரக்டரில் சம்மன் ஆகிறார் கவுசல்யா.

இசை ஸ்ரீசாய் தேவ்.பாடல்களை எங்கேயோ கேட்ட ஞாபகம். ஆனால் பின்னணி இசையில் குறை வைக்கவில்லை. மலை கிராமத்தை ஒளிப்பதிவு செய்த ஏ.ரமேஷ் மனதில் இடம் பிடிக்கிறார். கதை-ராஜ்குமார், ரேகா மூவிஸ் சார்பாக தயாரித்திருப்பவர் எம்.சக்கரவர்த்தி.

ஆரம்ப காட்சிகளில் சற்று மந்தமாகப் போகும் கதையில் இடைவேளைக்குப் பின் பேய்த்தனம் காட்டியிருக்கிறார் இயக்குநர் நவீன் கிருஷ்ணா. ஒன்லி பேய்ப்பிரியர்களுக்கான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.