சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் மலையாளப்படம். மீண்டும் ஒரு மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணி .எதிர்பார்ப்புக்குக் கேட்கவா வேண்டும்? ஆனால்…?

16ஆம் நூற்றாண்டில் கோழிக்கோடு நாட்டை ஆண்ட சமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதிகளாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தில் நான்காவது மரைக்காயராக இருந்த முகமதலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது. அந்தமான் சிறைச்சாலையை மையமாக வைத்து மோகன்லால் – பிரபு நடிக்க பிரியதர்ஷன் இயக்கிய ‘காலாபாணி’ பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததால் இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

சமூத்திரிகள் ஆளும் கோழிக்கோடு நாட்டில் தந்தையை இழந்த முகமதலி குஞ்ஞாலி (மோகன்லால்), பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார். அந்த நாட்டின் மீது போர்ச்சுகீசியர்கள் படையெடுக்கும் அபாயம் நேரும்போது, கொள்ளைக்காரனான குஞ்ஞாலிக்கு கடற்படைத் தளபதி பதவி கொடுக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்களை முறியடிக்கிறான் குஞ்ஞாலி.

இதனால், அரசவையில் அவனது மதிப்பு உயர்கிறது. இந்த நேரத்தில் குஞ்ஞாலிக்கு நெருக்கமான சீன தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் [கீர்த்தி சுரேஷ் ] ஏற்படும் காதல் எல்லா சமன்பாடுகளையும் மாற்றிவிடுகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.

இந்தப் படத்தில் முதலில் மனதை ஆக்கிரமிப்பது அதன் பிரம்மாண்டமான காட்சிகள்தான். கோட்டைகள், போர்க்களங்கள், கப்பல்கள் என ஒரு விஷுவல் ட்ரீட்டை அளித்திருக்கிறார் ப்ரியதர்ஷன். அதேபோல, மோகன்லால், பிரபு, கீர்த்தி சுரேஷ், நெடுமுடிவேணு என ஒரு அட்டகாசமான நடிகர்கள் பட்டாளமும் படத்தில் இருக்கிறது. ஆனால், ஒரு சிறந்த திரைப்படத்திற்கு இவை மட்டும் போதாதே…

குஞ்ஞாலியின் உண்மையான வரலாற்றிலிருந்து சற்று மாற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் சோர்வை ஏற்படுத்துகின்றன. விளையாட்டுத்தனமான இளைஞனாக இருந்து, கொள்ளைக்காரனாக மாறி, கடற்படைத் தளபதியாக குஞ்ஞாலி உருவெடுப்பதற்குள், நாம் ரொம்பவே டயர்டாகிவிடுகிறோம்.

படத்தில் நம்ம குண்டப்பா பிரபு உட்பட நிறைய பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், பலருக்கும் ஒன்றிரண்டு காட்சிகளே கிடைத்திருக்கின்றன. அதனால், எந்தப் பாத்திரத்தையும் ரசிக்கவோ, ஒன்றிப்போகவோ முடியவில்லை. அந்நியரை எதிர்த்துப் போராடும் வீரனின் கதை எத்தகைய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால் ஆயாசமே மிஞ்சுகிறது. குறிப்பாக பிரபுவைப்பார்க்கப் பார்க்க பரிதாபமே மிஞ்சுகிறது.

இந்தக் கதையில் வலிந்து புகுத்தப்பட்டிருக்கும் அர்ச்சாவின் (கீர்த்தி சுரேஷ்) காதல் கதையில் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை. ஏற்கனவே மெதுவாக நகரும் படம் இன்னும் மெதுவாக நகர்கிறது, அவ்வளவுதான்.

குறிப்பாக க்ளைமேக்ஸில் மோகன்லாலுக்கு தண்டனை கொடுக்கப்படும் காட்சி அப்படியே மெல் கிப்ஸனின் ‘பிரேவ் ஹார்ட்’படத்தின் அப்படமான காப்பி.

மூன்று மணி நேரம் ஓடும் படத்தை ஈவு இரக்கமில்லாமல், வெள்ளையர்கள் நம்ம ஆட்களை வெட்டிவீசுவதுபோல் வெட்டி வீசி ரெண்டு மணி நேரப்படமாக ஆக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.