இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாயோன்’ படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ”மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக ‘மாயோன்’ படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.

நாம் அனைவரும் நம்முள் பல ‘இயலாமை’களையும், ‘அச்சங்’களையும் கொண்டிருக்கிறோம். சிலருக்கு இவை இயல்பாக இருக்கும். பலருக்கு இவை பலரால் வழங்கப்பட்டதாக இருக்கும் அல்லது சமூகத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றதாக இருக்கும். எனவே அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. சர்வதேச மாற்று திறனாளி தின வாழ்த்துகள்!” என பதிவிட்டிருக்கிறார்.

இறைவனின் பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகள், தங்களின் விடா முயற்சியால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் சாதனை புரிந்திட, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். மாற்று திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவகையில் பிரத்தியேக வாழ்வாதாரத்தையும், நம்முடைய சமூக கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இந்நாளில் சபதம் ஏற்போம். அந்த வகையில் முதல் முயற்சியாக ‘மாயோன்’ படக்குழு, படத்தின் டீசரை பார்வை திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் உருவாக்கி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. எங்களைப்போல் தமிழ் திரையுலகினர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று பணிவான வேண்டுகோளை முன்மொழிகிறோம்.

‘மாயோன்’ படத்தில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே எஸ் ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீச்சருக்காக பிரத்யேக ஒலிக்குறிப்பை சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாற்றுதிறனாளி கலைஞரான ‘இன்ஸ்பயரிங்’ இளங்கோ மேற்கொண்டிருக்கிறார்.

இதனிடையே மாற்றுத்திறனாளிகளும் பலனடையும் வகையிலான பிரத்யேக ஒலிக்குறிப்புடன் படத்தின் டீஸர் வெளியிடும் பணியினை, தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இதற்கு முன்னர் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.