படத்துக்குப் படம் தன்னை வித்தியாசப்படுத்திக்கொள்வதில் நடிகர் ஆர்யா வெகுவாக முன்னேறி வருவதற்கு இந்த ‘கேப்டன்’ ஒரு கச்சிதமான உதாரணம்.

‘நாய்கள் ஜாக்கிரதை’,’டெடி’படங்கள் தந்த இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜாவின் இன்னொரு வித்தியாசமான கதைக்களம்.

வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது.

அதற்காக அந்தப்பகுதியை ஆய்வு செய்து தடையில்லாச்சான்று கொடுக்க இராணுவத்திடம் சொல்கிறார்கள். ஆய்வுக்குச் செல்லும் குழுக்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள்.

அப்புறம் என்ன அந்தப் பொறுப்பை ஹீரோவிடம் தானே ஒப்படைக்கவேண்டும்?

காலகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் அந்த சினிமா விதியின்படி, ஆர்யா தலைமையிலான குழு செல்கிறது. அவர்கள் போகும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

ராணுவவீரர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக எப்போதும் விறைப்புடனே இருக்கிறார் ஆர்யா. குறை ஒன்றுமில்ல.

நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி. சில காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார். ஆனாலும் நெகிழ்வான காட்சிகள்.

ஆர்யாவின் குழுவில் ஹரிஷ் உத்தமன், கோகுல்,பரத்ராஜ் ஆகிய ஆண்களோடு பெண்களுக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் கச்சிதமான டீ ஷர்ட் அணிந்துகொண்டு காவ்யாஷெட்டியும் இருக்கிறார். காவ்யா சில இடங்களில் வாவ்யா என்று சொல்லும்படி நடித்திருப்பதையும் குறிப்பிடவேண்டும்.

முக்கிய வேடமொன்றில் சிம்ரன் நடித்திருக்கிறார். பழங்கால ரசிகர்கள் மனம் நொறுங்கிப்போகும்படி இருக்கிறது சிம்ரனின் தோற்றம்.மாளவிகா, ஆதித்யா மேனன் ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கிறார்கள்.

யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவு. டி.இமானின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை கொஞ்சம் சவுண்டு தூக்கலாகவே இருக்கிறது.

வனப்பகுதி என்றாலே பிற உயிரினங்கள் அல்லது கனிமவளங்கள் ஆகியன வந்துவிடும். சக்தி செளந்தர்ராஜனின் இந்தக்கதையில் இவை இரண்டும் கலந்து வருகின்றன. விநோத உயிரினம் என்று சொல்லிவிட்டு காட்சிக்குக் காட்சி வெவ்வேறு விதமான உயிரினத்தைக் காட்டுகிறார்கள். அவற்றின் இராணி என்று ஆக்டோபஸ் போல் ஒன்றைக் காட்டுகிறார்கள்.

படம் ஒருமுறை பார்க்கும்படி டெக்னிக்கலாக நேர்த்தியாக இருக்கிறது என்றாலும் எண்பதுகளின் இறுதியில் வந்த ப்ரிடேட்டர் படத்தை ஞாபகப்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds