ஜெயமோகனின் ‘கைதிகள்’ என்ற சிறுகதையை முன்னும் பின்னுமாக நீட்டித்து எடுக்கப்பட்ட ரத்த சாட்சி திரைப்படம், ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. நக்சல்பாரித் தலைவரான அப்புவின் தியாக வரலாற்றைச் சொல்லும் படமாக இருக்கலாம் என எண்ணிப் படத்தைப் பார்த்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.

‘வன்முறையின் மூலம் எதையும் தீர்க்க முடியாது; மாறாக அதைக் கைக்கொண்டவர்கள் அழிக்கப்படுவார்கள்’ எனக் காலகாலமாகத் தட்டையாக முன்வைக்கப்படும் காந்தியக் கருத்தியலைக் கதையாடலாகச் சொல்கிறார் இயக்குநர் ரஃபீக். ஆனால், இதை யாருக்கு, எவ்விடத்தில் சொல்லவேண்டுமென்கிற அரசியல் புரிதலில்லாத தன்மையால் இப்படம் வலிமையற்றதாகி விடுகிறது.

நக்சல்பாரி இயக்கம் என்பதைப் பற்றிய தேடல் இயக்குநருக்குத் துளியும் இல்லை என்பதைவிட, அதை அறிந்துகொள்ளும் முனைப்பு இல்லை என்பதுதான் காட்சியமைப்புகளில் தெரிகிறது. ஒருங்கிணைந்த தஞ்சையில் பண்ணையடிமை முறையை ஒழித்தது, நிலப்பகிர்மானம், பண்ணையார் அழித்தொழிப்பு போன்றவற்றின் மூலம் உழைக்கும் மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுவித்ததில் நக்சல்பாரிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. தர்மபுரிப் பகுதியில் நிலவிவந்த கொத்தடிமை முறை, கந்துவட்டிக் கொடுமை போன்றவற்றை ஒழித்து எளிய மக்களின் நம்பிக்கை நாயகர்களாகத் திகழ்ந்தவர்கள் நக்சல்பாரிகள்.

தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோர் மக்களோடு மக்களாகக் களம் கண்டு தியாகிகளானார்களே தவிர, எந்நேரமும் துப்பாக்கியைச் சுமந்து காட்டுக்குள் திரிந்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, நக்சல்பாரி எழுச்சி அவருக்குப் பக்கபலமாக இருந்த காவல்துறையை செயலிழக்கச் செய்துவிடும் என்பதனால், நக்சல்பாரிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க தேவாரத்தின் தலைமையில் காவல்துறையை ஏவிவிட்டார். அது தனக்கிடப்பட்ட வேலையைச் சரியாகச் செய்து தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோரை என்கவுண்ட்டர் செய்துவிட்டு, இன்றளவும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது.

ஆனால், ‘ரத்த சாட்சி’யில் இயக்குநர் ரஃபீக் பதிவு செய்திருக்கும் நக்சல்பாரி அரசியலும், காவல்துறையின் செயல்பாடுகளும் முற்றிலும் வேறாக இருக்கிறது.

தோழர் அப்பு அறிமுகமாகும் காட்சியில், யானை ஒன்றை அழைத்துக்கொண்டு, கரும்புக் காட்டுக்கு வருகிறார். கங்கானியைக் கூப்பிட்டு ‘யானை அடி வாங்கி சாவாம இருக்கனும்னா நீயும் உன் கூட்டாளிகளும் போய் ஓரமா நில்லுங்க’ என்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் டீயும், பீடியும்தான் அதிகபட்ச உணவே அக்காலகட்டத்தில். இப்படியிருக்கையில் யானையைக் கட்டித் தீனி போடும் அளவுக்கு வசதி படைத்தவரோ தோழர் அப்பு? யானையை ஏவி எதிரியை அடிக்கச் சொல்வதெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றிய புரிதலில்லாமையே.

‘தாளடி’ எனும் கேவலமான நாவலில், வெண்மணித் தியாகத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பார் சீனிவாசன் நடராஜன் எனும் நபர். அதில், செங்கொடி இயக்கத் தீவிரவாதிகள் பண்ணையார்களின் நிலத்தில் விளைந்திருக்கும் பயிர்களையெல்லாம் தீ வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள் எனப் புளுகியிருப்பார் அந்நாவலில். அதைப்போல இப்படத்திலும், தோழர் அப்பு கரும்புத் தோட்டத்தைத் தீவைத்துக் கொளுத்துவாகக் காட்டப்படுகிறது. கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் பயிர்களை சேதப்படுத்தியதில்லை. ஏனெனில், அது அவர்களின் ரத்தத்தால் விளைவிக்கப்பட்டது.

ஜெயமோகன் ‘துணைவன்’ எனும் சிறுகதையில் நக்சல்பாரித் தோழர் ஒருவரை ‘கோனார்’ என ஜாதியப் பெயரால் அடையாளப்படுத்தியிருப்பார். ஜெயமோகனின் அபிமானியான இயக்குநர் ரஃபீக், இதில் ‘கம்பளராஜு நாயக்கர்’ என்பவரை தீ.கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகச் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், கம்பளராஜு நாயக்கர் பெரும் செல்வந்தராம்! அவருக்கு எல்லாக் கட்சிகளிலும் செல்வாக்கு இருக்கிறதாம்; ஆட்கள் இருக்கிறார்களாம்! அப்படி இருந்தால் அவர் எப்படி நக்சல்பாரியாக இருந்திருக்க முடியும்?

தோழர் அப்பு மக்களுக்காகச் செய்யும் செயலாக இரண்டு நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. ஒன்று, சாராயம் காய்ச்சும் முதலாளி ஒருவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு சரியான கூலி வாங்கிக் கொடுக்கிறார் (!). இன்னொன்று, கரும்புத் தோட்ட முதலாளியைக் கொலை செய்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் என்றால் கூலிப்பிரச்சனைக்காகப் போராடுபவர்கள் என்பதை மட்டும் இயக்குநருக்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சாராயம் காய்ச்சும் தொழிலிலும் கூலிப்பிரச்சினை இருக்கக் கூடாது எனத் தன் பரந்துபட்ட சிந்தனையை தோழர் அப்புவின் மீது சுமத்தியிருக்கிறார் இயக்குநர். இதன் பின்னர், படம் முழுக்க காவல் துறைக்கும், நக்சல் போராளிகளுக்குமிடையேயான மோதலாக மட்டுமே மாறிவிடுகிறது.

சக தோழனை லாக்கப்பில் கொலை செய்த காவல்துறை அதிகாரியை, பழிக்குப் பழி வாங்குறார் தோழர் அப்பு. ஆனால், அதன்பின்னர் அதை நினைத்து மருகி மருகி குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். இறுதியில், தனக்காக பிறர் துன்பப்படக் கூடாது என முடிவெடுத்து காவல்நிலையத்தில் சரண்டர் ஆகிறார். அதற்கு முன்னதாக, ஓலைக்குடிசையில் இருக்கும் அம்மா, அப்பாவைச் சந்திக்கிறார். அம்மா கையால் கருவாட்டுக் குழம்புச் சோறு உண்ண விரும்புகிறார். அம்மா மகனை ஆசீர்வதித்து நெற்றியில் சிலுவையிடுகிறாள். பின்னணியில் கருணை ததும்பும் முகத்துடன் யேசுநாதர் படமாகத் தொங்குவது தெரிகிறது. இயக்குநர் அரசியல் படம் எடுக்க நினைத்து, வழமையான சென்ட்டிமெண்ட் குடும்பக் கதையாக்கியிருக்கிறார்.
தோழர் அப்புவின் குடும்பம் ஏன் கிறிஸ்துவக் குடும்பம்? ஒன்றும் புரியவில்லை.

கொல்லப்படும் முன் இறுதியாக, நல்ல போலீஸ் ஒருவரிடம் ‘உங்க வேலையும் கஷ்டம்தான் இந்தக் காட்டுல’ என்கிறார் ஜெயமோகன்…இல்லை இல்லை தோழர் அப்பு. காவலர்கள் படும் பாட்டை அவர்களால் கொல்லப்படுபவர்களை வைத்தே சொல்லவைத்து, நம்மை காவல்துறை மீது பரிதாபம் கொள்ளச் செய்யும் குயுக்தியெல்லாம் ஜெயமோகனுக்கு கைவந்த கலை. பாவம், அதை அப்படியே இயக்குநரும் படத்தில் வைத்திருப்பது அவரின் போதாமை.

ஒரு படைப்பாளி எதை படைப்பாக்க வேண்டும், எப்படிப் படைப்பாக்க வேண்டும் எனச் சொல்வதெல்லாம் கருத்தியல் வன்முறை. ஆனால், மாபெரும் மக்கள் எழுச்சி இயக்கமாகத் திகழ்ந்த ஒரு அமைப்பைப் பற்றி படமாக்கும்போதும் வரலாற்று நேர்மை கட்டாயம் வேண்டும். அதை இப்படத்தில் முழுமையாக தவறவிட்டிருக்கிறார் இயக்குநர்.

கருத்தியல் ரீதியாகப் படம் பலவீனமாக இருக்கிறது. படம் மிக மெதுவாக நகர்கிறது. வசனங்கள் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம். ஆனாலும் சில காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன. புதிதாக ஒரு ஊருக்குள் நுழைந்த தோழர் அப்பு, அங்கிருக்கும் மக்களுடன் இணக்கமாவதற்காக வெற்றிலை கொடுத்து பேச்சில் கலக்கிறார். இதேபோல, இன்னொரு காட்சி. தலைமறைவுத் தோழர்களுக்கு அரிசி கொண்டுபோகும் பெண்ணை காவலர்கள் அடித்த பின், நல்ல போலீஸ் அப்பெண்ணுக்கு தண்ணீர்க் கேனைக் கொடுக்கிறார். அவளோ இரண்டு கைகளையும் குவிக்கிறாள். போலீஸ் அதில் ஊற்றாமல், தண்ணீர்க் கேனை கைகளில் வைக்கிறார். அருமையான காட்சிப்படுத்தல்.

தமிழ் சினிமாவில், இதுவரை காட்டப்படாத ஒரு காட்சியும் படத்தில் உண்டு. முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. அவர்கள் பேசப்பேச, அதைக் கவனிக்காமல், தன் வலதுகையில் கட்டியிருக்கும் கடிகாரத்தைக் கழற்றி சாவிகொடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு அதிகாரி ‘நக்சலைட்டுகளை அடக்காம விட்டா, மக்கள் ஹீரோவா அவதாரம் எடுத்துருவாங்க’ என்கிறார். இதைக் கேட்டதும், சட்டென எம்.ஜி.ஆர். சாவி கொடுப்பதை நிறுத்திவிட்டு, ‘நக்சலைட் வாசனையே தமிழ்நாட்டுக்குள்ள இருக்கக் கூடாது’ என்கிறார். உழைக்கும் மக்களுக்காகப் பாடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கொன்ற கொலை பாதகர் எம்.ஜி.ஆர்.தான் என்பதை திரை வரலாற்றில் துணிச்சலாகப் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். படத்தின் இறுதிக் காட்சியில் தோழர் அப்புவின் கொலையும், அதன் வலியும் நம்மை கலங்கடிக்கச் செய்கிறது. அப்படியொரு காட்சிப்படுத்தல்.

இறுதியாக ஒரு கேள்வியும், ஒரு ஆச்சரியமும். தோழர் அப்புவைக் காட்டிக் கொடுக்கும் பள்ளி ஆசிரியரின் பெயர் ஏன் புவியரசு எனவாக சூட்டப்பட்டிருக்கிறது? ஆச்சரியம் என்னவெனில் ‘நக்சல்பாரிக்கு மரணமில்லை; நக்சல்பாரிக்கு அழிவில்லை’ எனக் கோஷம் எழுப்பும் தலைவராக நடித்திருக்கிறார் சாம்ராஜ். சில வருடங்களுக்கு முன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் கூட்டத்தில், நக்சல்பாரிகளைப் பற்றி எள்ளலாகப் பேசி, ஜெயமோகனைக் குளிர்வித்த சாம்ராஜை எப்படி இந்தக் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தார் இயக்குநர்!

வரலாற்றைப் புனைவு கலந்து படைக்கலாமே தவிர, வரலாற்றையே தன் விருப்பத்திற்கு ஏதுவாக, தன் புரிதலின் போதாமையில் படைத்தால் அது என்னவாக இருக்கும் என்பதற்கு ‘ரத்த சாட்சி’ ஒரு பரிதாபமான உதாரணம்.

–தோழர் புலியூர் பதிவு விமர்சனம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds