கன்னட பெண் இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் விஜயானந்த். வாழ்க்கை வரலாறு போன்ற கனமான கதையுள்ள படத்தை இவ்வளவு இளம் வயதிலேயே இயக்கத் துணிந்ததற்காக இவரை நிச்சயம் பாராட்டலாம்.

பதிப்புத்துறையில் இருக்கும் அப்பா வழியில் அத்துறையில் ஈடுபடாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேஷ்வரின் வாழ்க்கைக் கதை தான் திரைப்படம். VRL ரோட்வேஸ் என்று இன்றும் கர்நாடகாவில் முன்னணி சரக்கு போக்குவரத்து நிறுவனமாகத் திகழ்கிறது இவரின் நிறுவனம்.

விஜயானந்தின் வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், விஜயானந்தாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு எதார்த்தமாக நடித்திருக்கிறார்.தொழிலில் போட்டி பொறாமை வருமிடத்தில் திகைத்து பின் அதை எதிர்கொள்ளும் விதம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் காட்சிகள். மனைவியுடன் இளகுவது எதிர்களிடத்தில் எகிறுவது ஆகிய காட்சிகளில் நடிப்பில் நற்பெயர் பெற்றே ஆகவேண்டுமென அவர் உழைத்திருப்பது தெரிகிறது.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரகலாத், நல்ல குடும்பத்தலைவிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.  ஆனந்த்நாக், பரத்போபண்ணா உள்ளிட்டு படத்தில் இருக்கும் நடிகர்களைத் தேடித்தேடி எடுத்தது போல் இருக்கிறது. அதற்கு நியாயமாக அவர்களும் நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தன்பூஜாரியின் ஒளிப்பதிவில் பீரியட் சினிமாவுக்கான அந்தக் காலகட்டம் அப்படியே கண்முன் தெரிகிறது. அதற்கான வண்ணங்களையும் அவர் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. கோபிசுந்தரின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம். பின்னணி இசையில் அங்கங்கே பொறி பறக்கிறது.

கலை இயக்கமும் உடைகள் வடிவமைப்பும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

இன்றும் வாழந்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக்கதையை அனைவரும் இரசிக்கும்படி மட்டுமல்ல அவரே இரசிக்கும்படி படமாக்கி நல்ல இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார் ரிஷிகாசர்மா.

இது போன்ற தொழிலதிபர்கள் முன்னேறும் வாழ்க்கைக் கதையெல்லாம் மேற்கத்திய சினிமாக்களில் எப்போதோ நிறைய எடுத்துவிட்டார்கள். இப்போது தான் இந்திய சினிமாக்களில் இது போன்ற உண்மையான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

லேட்டானாலும் லேட்டஸ்ட் தானே.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds