வில்லன்களான சஞ்சய் தத்தும், அர்ஜுன் இருவரும் சகோதரர்கள். போதைப் பொருள் விற்பவர்கள். அண்ணன் சஞ்சய்தத்தின் மகன் தான் லியோவாகிய விஜய். அப்பாவுக்கு தொழிலில் ஒத்தாசையாக இருந்து மிரட்டிக் கொண்டிருக்கும் இளைஞன் விஜய் திடீரென்று ஒரு விபத்தில் இறக்கிறார்.

ஒரு 20 ஆண்டுகள் கழித்து, கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பார்த்திபன் என்கிற இன்னொரு விஜய், மனைவி த்ரிஷா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நிம்மதியாய் பேக்கரி நடத்திவரும் குடும்பஸ்தன். இந்த விஜய்யை சஞ்சய் தத் மீண்டும் சந்திக்க நேர்கிறது.

அவர் தான் விஜய்யின் இறந்து போன லியோவா, இல்லையா.  ஆமாம் என்றால் 20 வருடம் ஏன் அப்பாவை விட்டுப் போனார், இல்லை என்றால் எப்படி இந்த விஜய் bad ass லியோவை விடத் திறமையாக எதிரிகளை சட்சட்டென்று வீழ்த்துகிறார் என்பது போன்ற கேள்விகளை வைத்து, ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, இரண்டே முக்கால் மணி நேரம் ஓடி க்ளைமாக்சில் முடிவு தெரிகிறது. 

விஜய் இந்தப் படத்தில் நன்றாக நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அடிதடி காட்சிகளும் தூள்பறக்கின்றன. History of violence என்கிற ஆங்கிலப் படத்தின் தூண்டுதலைக் கொண்டிருக்கிறது கதையமைப்பு என்கிறார்கள். சாதாரண குடும்பஸ்தராகவும், கடத்தல் கேங் லீடராகவும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். படம் முழுக்க விஜய்யை சுற்றித் தான் நகர்கிறது.

விஜய்யின் ஜோடியாக த்ரிஷா, வெறுமனே அழகு ஹீரோயினாக இல்லாமல் அழுத்தமான பாத்திரமும் செய்திருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜூன் வில்லன்கள். அர்ஜூனை இன்னும் உபயோகப்படுத்தியிருக்கலாம்.

இயக்குனர் லோகஷ் கனகராஜ் தனது இருண்ட கதைகள், மனிதர்கள் ஸ்டைலில் இயக்கியிருக்கிறார். வெற்றிப்பட, அதிரடிப் பட இயக்குனர் என்ற பெயரை ஏற்கனவே வாங்கிவிட்டார். மிஷ்கின் போல ஒரு ஸ்டைலிஷான இயக்குனர் என்று பெயர் வாங்க இவரது பாத்திரப் படைப்புக்கள் இன்னும் வலுவானதாக, மனதில் நிற்பதாக இருக்க வேண்டும். இதுவரை, லோகேஷின் விக்ரம் மட்டுமே அப்படி மனதில் ஸ்ட்ராங்காக நிற்கிறார்.

ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் படத்தில் உண்டு. கவுதம் மேனன் விஜய்யின் நண்பராக வருகிறார். அனைவரும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

அனிருத் பின்னணி இசையில் சிறப்பு செய்திருக்கிறார். படத்தின் பிற்பாதியை நிமிரச் செய்வதில் பின்னணி இசைக்கும் பங்கு உண்டு. ‘நா ரெடிதான்’ பாடல் மட்டும் தேறுகிறது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா 2009ல் வந்த ஈரம் படத்தில் விருது வாங்கியவர். அப்படியே மலையாளம் , தெலுங்கு என்று சுற்றி மீண்டும் லியோவில் வந்து மிரட்டியிருக்கிறார்.

படத்தின் ஸ்டன்ட் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் ஆக்சன் காட்சிகளுக்கு இணையாக உருவாக்கியிருக்கும் ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ் மாஸ்டர்கள் படத்தின் அடுத்த லியோக்கள்.

மொத்தத்தில் இந்த லியோ ஒரு குடும்பக் கதைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோ. விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம். மற்றவர்கள் ரசித்துவிட்டு வரலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.