விஜய் நடித்துள்ள லியோ அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடனும் நல்ல வசூலுடனும் ஓடிக்கொண்டிருக்கிறது.இது விஜய் நடித்துள்ள 67 ஆவது படம்.

ஆனால், இப்படம் வெளியாகுமுன்பே விஜய்யின் 68 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

விஜய் 68 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 21,2023 அன்று வெளியானது.

அப்போது வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்……

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின்
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தங்களின்
25 ஆவது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட்பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார்.

‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது.

தளபதி 68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25 ஆவது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அனைத்துப்பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக தளபதி68 இருக்கும். சர்வதேசத் தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி68, 2024 ஆம் ஆண்டு வெளியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு அப்படத்தின் தொடக்கவிழா அக்டோபர் 2,2023 நடைபெற்றது.

இப்படத்தில் விஜய்யுடன்,பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பல நடிகர்களும் பிரியங்காமோகன், மீனாட்சிசெளத்ரி, சினேகா,லைலா உள்ளிட்ட பல நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு வெந்துதணிந்ததுகாடு படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த்தாநுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

அள்ளித்தந்தவானம்,வெள்ளித்திரை ஆகிய படங்களின் இயக்குநரும் மொழி, 36 வயதினிலே,அடங்கமறு உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதி அப்படங்களின் வெற்றிக்கு முக்கியப்பங்காற்றிய விஜி வசனம் எழுதுகிறார்.

இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா,அரவிந்த்சாமி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் கேட்ட சம்பளம் அதிகம் என்று தயாரிப்பு நிறுவனம் கருதியதால் அவர்கள் நடிக்கவில்லை.

அதனால் அந்த வேடத்தில் நடிகர் மோகன் நடித்துக் கொண்டிருக்கிறார். மோகன் கதாநாயகனாக நடிக்கும் ஹரா படத்தின் செய்திக்குறிப்பில் விஜய் 68 படத்தில் அவர் எதிர்நாயகனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், படத்தில் மோகனுக்கு மனைவி வேடம் உள்ளதாம். அவ்வேடத்தில் யாரை நடிக்க வைப்பது? என்கிற ஆலோசனையில் பல பெயர்கள் பரிசீலனைக்கு வந்திருக்கின்றன. இறுதியாக, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்று வரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் முன்னாள் நாய்கி கனிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

ஒரு தொலைக்காட்சித் தொடரில் கிடைத்த புகழ் காரணமாக அவர் எல்லோரையும் வீழ்த்தி இந்த இடத்தைப் பிடித்துவிட்டார் என்கிறார்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.