சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கதாநாயகன்,அதனால் ஏற்படும் விளைவு காரணமாக ஓர் அதிசய திறனை அடைகிறார்.அதன்படி பிறருக்கு நடக்கவிருக்கும் கெட்ட விசயங்கள் அவருக்கு முன்கூட்டியே தெரியவருகிறது.இந்நிலையில் அவருடைய காதலி இதுபோன்றதொரு சிக்கலில் மாட்டுகிறார்.காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார்.காதலிக்கு என்ன சிக்கல்? அதிலிருந்து மீள நடக்கும் போராட்டங்கள் என்னென்ன? என்பதுதான் அந்த 7 நாட்கள் படம்.

காதலிக்கு நடக்கும் சிக்கலின் கால அளவு 7 நாட்கள் என்பதால் படத்துக்கு இந்தப்பெயர்.

அஜிதேஜ் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.அறிமுக நடிகர் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.காதலிப்பதையும் காதலியைக் காப்பாற்றுவதையும் சிரமேற்கொண்டு செய்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதாவுக்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம் கொஞ்ச நேரம்தான்.அதன்பின் மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.அதற்கேற்ப நடித்து ஆச்சரியப்படுத்துகிறார்.

அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன் உள்ளிட்ட நடிகர்களும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் இரகம்.பின்னணி இசை மூலம் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பயங்கரம் மேலும் பயங்கரமாகத் தெரிகிறது.

கோபிநாத் துரையின் ஒளிப்பதிவு நன்று.குறிப்பாக கதையின் மையமான நாயகியின் தோற்ற மாற்றம் சரியாகப் பதிவாகியிருப்பதற்கு அவருடைய உழைப்பே காரணம்.

படத்தொகுப்பாளர் முத்தமிழன் இராமுவின் முயற்சியால் படம் சோர்வின்றி நகர்ந்து செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சுந்தர்.நாட்டில் இன்று அதிகமாகப் பேசப்படும் தெருநாய்க்கடிச் சிக்கல் மற்றும் அதன் விளைவுகளை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதை நேரடியாகச் சொன்னால் பரப்புரையாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து வானியல் ஆய்வு, அதன் தவறான விளைவு, அளவற்ற காதல் ஆகியனவற்றைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு சொல்லியிருப்பதன் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.