ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஜனநாயகன் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் வரும் 9-ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக சொன்ன சென்சார் போர்டு பின்பு மதத்தை புண்படுத்துவதாக யாரோ புகார் கொடுத்தார்கள் என்று சொல்லி சர்டிபிகேட் தராமல் இழுத்தடித்தது. 

இதை எதிர்த்து படக்குழுவினர் நீதிமன்றத்தில் சென்சார் போர்டு சர்டிபிகேட் தர உத்தரவிடச் சொல்லி வழக்கு தொடர்ந்தனர்.

ஜனவரி 6 அன்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

“அனைத்தும் விநோதமாக உள்ளது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு முடிவு செய்த பிறகு மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன்.. மறுஆய்வுக்கு அனுப்புவது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்?” – ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில் நீதிபதி பி.டிஆஷா எழுப்பிய கேள்விகள் இவை.

 

ஆனால், ‘படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை’ எனவும் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரியும் கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

சிபிஎப்சி (CBFC) என்கிற ஒன்றிய அரசின் துறையான சென்சார் போர்டு சார்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

 

அப்போது, படத்தை 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மத்திய அரசின் வழக்கறிஞர், “ஒரு கோடி ரூபாயில் படம் எடுத்தாலும் 500 கோடி ரூபாயில் படத்தை எடுத்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றிதழ் வழங்குமாறு நிர்பந்திக்க முடியாது” என வாதிட்டார்.

 

புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ஜனநாயகன் படத்துக்கு எதிராக இமெயில் மூலம் பெறப்பட்ட புகாரின் நகல் உள்பட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக’, மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி பி.டி.ஆஷா, “திரைப்படத்தை மறுஆய்வு செய்வதற்கு அந்தப் புகார் மட்டும் தான் அடிப்படையாக உள்ளது.” என்றார்

“படத்தை ஆய்வு செய்த குழுவில் இருந்தவர் அளித்த புகார் ஏற்கத்தக்கதா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, “அனைத்தும் விநோதமாக உள்ளது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு முடிவு செய்த பிறகு மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன் எனவும் மறுஆய்வுக்கு அனுப்புவது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

“ஜனநாயகனை மறுஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல” எனக் கூறிய அவர், ” சென்சார் போர்டு வாரிய தலைவருக்குத் தான் அதிகாரம் உள்ளது” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மறுஆய்வு குறித்து ஏன் தெரிவிக்கவில்லை என வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, “மறுஆய்வு குறித்து முன்கூட்டியே அவர்கள் எச்சரிக்கப்படவில்லை” எனவும் தெரிவித்தார்.

படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மோகன் பராசரன்,
“திரைப்படத்தைப் பார்த்த அந்த உறுப்பினர் பரிந்துரைகளை மட்டுமே அளித்திருக்க முடியும். புகார் அளித்திருக்க முடியாது. இங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை” என வாதிட்டார்.

“குழுவின் உறுப்பினர் தற்போது புகார்தாரராகிவிட்டார். இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை” எனக் கூறிய அவர், ” வாரியம் தனது முடிவை மறுஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்” எனக் கூறினார்.

குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் புகார் அளித்தார் என்பதே இன்று தான் தெரியவந்ததாகக் கூறிய மோகன் பராசரன், “ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவுக்கு மாறாக ஒரு உறுப்பினர் மட்டுமே ஆட்சேபம் தெரிவித்துள்ளார் என்றால் படத்தை எப்படி மறுஆய்வுக்கு அனுப்ப முடியும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என ஒரே ஒரு உறுப்பினர் எவ்வாறு கூற முடியும் எனவும் படத் தயாரிப்புக் குழு கேள்வி எழுப்பியது. மேலும், இந்த முழு நடவடிக்கையும் யாருடைய கவனத்துக்கும் வராமல் ரகசியமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி பி.டி.ஆஷா தெரிவித்தார். அப்போது படக்குழு தயாரிப்பு தரப்பில், ஜனவரி 9 ஆம் தேதியன்று படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறியது.

இதையடுத்து, ஜனவரி 9 ஆம் தேதியன்று வழக்கில் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.