மகளின் காதலை ஏற்கமறுக்கும் தந்தை,காதலனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.அவர் மீன்பிடி படகு பழுதுநீக்கும் தொழில் செய்பவர் என்பதால் கடலும் படகுகளும் அத்துபடி.அதனால் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து முடித்துக்கட்டத் திட்டமிடுகிறார்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆழி.

பாசமுள்ள தந்தை, திறன்மிக்க பழுதுநீக்குநர், இவை இரண்டுக்கும் மேலாக போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஆகிய வேடங்களை ஏற்றிருக்கிறார் சரத்குமார்.அவர் இயல்பான தோற்றத்தில் இந்தக் கதாபாத்திரங்களைச் செய்திருந்தாலும் மக்கள் ஏற்பார்கள்.ஆனாலும்,நீண்ட தலைமுடி தாடி ஆகியனவற்றை வைத்து தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார்.தன்னுடைய மதிப்புக்கும் பாசத்துக்கும் சவால்விடும் மகளின் காதலனை அவர் நடத்தும் விதத்தில் தானொரு தேர்ந்த நடிகர் என்பதை காட்டிக் கொண்டேயிருக்கிறார்.

காதலனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித்தின் கதாபாத்திரம், இளைஞர்களின் பிரதிநிதிபோல் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.உங்கள் மகளின் மனம் புரிந்த இணை நான்தான் என்பதை வசனங்களில் மட்டுமின்றி பார்வைகளிலும் உடல்மொழியிலும் சரத்குமாரிடம் வெளிப்படுத்துகிறார்.

சரத்குமார் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் நல்ல தேர்வு.குறைவான திரை இருப்பு என்றாலும் பார்ப்போர் மனதில் நிறை இருப்பு.

ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச் செல்வி,டீனா பாட்டியா, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ்,வையாபுரி உட்பட பலர் படத்தில் இருக்கிறார்கள்.

ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் நடக்கின்றன. உண்மையாகவே அங்குபோய் படப்பிடிப்பு நடத்திய உணர்வைக் கொடுத்திருக்கிறார்.

லஜ்ஜாவதியே வை மனதில் கொண்டு பாடல்களைக் கேட்டால் ஏமாற்றம் கொடுத்திருக்கிறார் ஜாஸி கிப்ட். வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும்,ரசூல் பூக்குட்டியின் ஒலிவடிவமைப்பும் கடலுக்குள் இருக்கும் ஒலிகளை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

படத்தொகுப்பாளர் கே.சீனிவாஸுக்கு குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு நகரும் படத்தை போரடிக்காமல் கொடுக்க வேண்டிய சவால்.சில இடங்களில் நிறைவு.பல இடங்களில் குறைவு.

மாதவ் ராமதாசன் எழுதி இயக்கியிருக்கிறார்.காலங்காலமாக நாட்டில் நடந்துவரும் காதலனின் காதல் பெரிதா? தந்தையின் பாசம் பெரிதா? என்கிற பட்டிமன்றத்தின் தொடர்ச்சியாக இந்தக்கதையை எழுதியிருக்கிறார்.பின்புலத்தை ஆழ்கடலாக வைத்து வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.