கதாநாயகர்களை நம்பி ஓடிக்கொண்டிருக்கும் திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன்.
அதன் தொடர்ச்சியாக ‘குற்றமே தண்டனை’,‘ஆண்டவன் கட்டளை’ எனக் கதையை மட்டுமே நம்பி பயணித்துக்கொண்டிருக்கிறார். அவரது அடுத்த படைப்பாக கடைசி விவசாயி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
கடைசி விவசாயி திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் மணிகண்டன் பேசும்போது, “விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், அது எவ்வாறானது என்பதே கடைசி விவசாயி திரைப்படத்தின் கரு. ஒரு கிராமத்தில் தொடர்ந்து எந்தவிதமான நல்ல விஷயங்களும் நடைபெறாமல் இருக்கிறது. இதற்கு குல தெய்வத்துக்கு வழிபாடு செய்யாததுதான் காரணம் என்று அதற்குத் தயாராகும் மக்களிடம், அனைவரும் ஒரு மரக்கா நெல் வீதம் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில்தான் அவ்வூரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்பதும் ஒரே ஒரு 85 வயது காது கேளாத முதியவர் மட்டும் தனது மிகச் சிறிய நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருவதும் ஊர்மக்களுக்குத் தெரியவருகிறது. ஊரே சேர்ந்து சென்று அவரிடம் நெல் கேட்கும். அதற்கு அவர் என்ன செய்கிறார், குல தெய்வ வழிபாட்டில் தற்போது எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை விளக்குவதாக படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.
கிராமப்புறத்தில் துக்க செய்தியைக்கூட நையாண்டியாகச் சொல்வார்கள். அதே கதைக்களம் அமைந்துள்ளதால் படம் முழுக்க காமெடி இருந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் உரையாடல்கள் நம்மை யோசிக்கவும் வைக்கும்.
உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கு காணப்படும் விவசாய முறை மிகவும் பழைமையானது. தமிழர்களின் விவசாய முறையைக் கையில் வைத்திருக்கும் கரிசல்காட்டு விவசாயிகளைக் கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன். படத்தின் தலைப்பை வைத்து முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள். படத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களே நடிக்கவைக்கப்பட்டுள்ளனர். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சிறு வேடத்தில் நடித்துள்ளனர். அவர்கள் எதற்காக நடிக்க வைக்கப்பட்டார்கள் என்பது படம் பார்த்தால் தெரியும்” என்று கூறினார்.2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.