ரஜினியின் ’தர்பார்’திரைப்படம் மிக சுமாரான ரிப்போர்ட்டையே பெற்றிருக்கும் நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் ரஜினி உட்பட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.இதனால் படம் வெளியான இரண்டாவது நாளே வசூல் பாதியாகக் குறைந்துள்ளதாக தகவல்.
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியானது. தமிழகத்தில் சிறப்பு காட்சியைக் காண தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். பல தியேட்டர்களில் காலை 5 மணிக்கே ‘தர்பார்’ திரையிடப்பட்டன. ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட தடைகோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இதையடுத்து ‘தர்பார்’ படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட கோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டது. இதையும் மீறி ‘தர்பார்’ திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணையதளங்களில் வெளியானது. அதனை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சமீபகாலமாகவே புதிய படங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தது. திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இணையத்தில் பலர் தர்பார் படத்தை தரவிறக்கம் செய்யும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கோடிக்கணக்கான பணம்,நூற்றுக்கணக்கானோரின் பல மாத உழைப்பில் உருவாகும் கிட்டத்தட்ட அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி அல்லது சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது.இப்படத்தைத் தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்துக்கும் பைரஸி இணையதளங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அந்நிறுவனம் தயாரித்த படமே இணையதளங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.