தமிழில் இதுவரை அம்மா செண்டிமெண்ட் கதைகள் பல்லாயிரக்கணக்கிலும் டைம் டிராவல் கதைகள் ஒரு சிலவும் வந்துள்ளன.
ஆனால் அவை இரண்டையும் ஒரே கதையில் வைத்து சுவாரசியப்படுத்தியிருக்கும் படம் இந்த ‘கணம்’.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, 90’களின் ட்ரீம் கேர்ள் அமலா அம்மாவாக நடிக்க, ஷர்வானந்த்,நாசர், ரமேஷ் திலக், சதிஷ், ரிது வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை இதுதான்…இசைக்கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் ரமேஷ் திலக், திருமணத்துக்குத் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சதீஷ். பள்ளியிலிருந்தே இணைபிரியா நண்ர்களான இவர்கள் மூவருக்கும், தனித்தனியே தேவைகளும் ஆசைகளும் உண்டு. ஆனால், அவற்றை அடைய முடியாத வாழக்கை. இந்தச் சூழலில்டைம் டிராவல் எந்திரத்துடன் வரும் நாசர், நீங்கள் கடந்த காலத்துக்குச் சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் உதவி செய்கிறேன் என்கிறார்.
அதை ஏற்றுக்கொண்டு,தன் சிறுவயதில் நடந்த அம்மாவின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் ஷர்வானந்த். அந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் யாரும் சற்றும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று நடக்கிறது. அதை எழுதினால் படம் பார்க்கிற சுவாரசியம் போய்விடும்.
ஷர்வானந்த் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு வலுச்சேர்க்க முயன்றிருக்கிறார்.பள்ளிப்பருவத்தில் இழந்த தன் அம்மாவை டைம் மெஷின் மூலம் திரும்பப் பார்க்கும் காட்சிகள் நெகிழ்ச்சி.அம்மாவை மீண்டும் இழந்து விடுவோமோ என்று தவிக்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் அமலா, ஓர் உண்மையான அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். உருவத்தில் சில மாற்றங்கள் இருந்தாலும் அவருடைய அடையாளமான புன்சிரிப்பு அப்படியே இருக்கிறது. இனி கொஞ்ச காலத்துக்கு அம்மா வேடத்துக்கு இயக்குநர்களின் முதல் சாய்ஸ் நிச்சயமாக அமலாதான்.
நாயகி ரீத்துவர்மாவுக்கு அதிக வேலையில்லை என்றாலும் கனகச்சிதமான நடிப்பு. அதிலும் சிறு வயது ஷ்ர்வானந்த் அவர் யார் என்று தெரியாமல் ‘அக்கா அக்கா என்று அழைக்க ‘டேய் முதல்ல என்னை அக்கான்னு கூப்பிடுறதை நிறுத்து’ என்று சொல்லும் காட்சியில் மொத்த தியேட்டரும் அதிர்கிறது.
நாயகனின் நண்பர்களாக வரும் சதீஷ், ரமேஷ்திலக் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைத்து படம் இலகுவாக நகர்வதற்கு உதவியிருக்கிறார்கள்.
விஞ்ஞானியாக நடித்திருக்கும் நாசர், அமலாவின் கணவராக வரும் ரவிராகவேந்தர் ஆகியோர் நல்ல தேர்வு.
ஜேக்ஸ் பிஜோயின் இசையில்,’ஒருமுறை என்ன பாரம்மா’ பாடல்,அம்மா மகன் பாசத்தைக் காட்ட காட்சிகள் இல்லை என்கிற குறை தெரியாமல் நிறைவு செய்கிறது.பின்னணி இசை.காட்சிகள் வெளிக்காட்டும் உணர்வுகளுக்குப் பலம் சேர்க்கிறது. சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவு, தற்போதைய காலகட்டம் முற்காலம் ஆகியனவற்றை வேறுபடுத்திக்காட்டி படம் குழப்பமில்லாமல் நகர உதவியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீகார்த்திக் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். மனம் கொள்ளைகொள்ளும் படம் இந்த கணம்.