அண்மைக்காலமாக முக்கோணக் காதல்கதைகள் வருவதில்லை.அந்தக் குறையைப் போக்கும் வண்னம் வந்திருக்கும் படம் காதல் ரீசெட் ரிபீட்.

நாயகி ஜியா சங்கருக்கு மறதிநோய் வருகிறது.அதைப் பயன்படுத்தி நான்தான் உன் காதலன் என்று அறிமுகமாகிறார் நாயகன் மதுமகேஷ்.ஆனால் உண்மை வேறு. அது என்ன உண்மை? அது நாயகிக்குத் தெரிந்ததா? கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மதுமகேஷுக்கு காதலுக்காக ஏங்கும் கதாபாத்திரம்.காதல் உணர்வுகள், காதலி அண்மையில் இருக்கும் மகிழ்ச்சி அதேநேரம் மனதளவில் இருக்கும் இடைவெளி ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தமான வேடம்.சிறப்பாக இல்லையெனினும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஜியா சங்கர், நல்ல புதுவரவு.அவருடைய அழகும் நடிப்பும் இந்தக்கதைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

இன்னொரு நாயகனான அர்ஜுன் அசோகனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதற்குத் தக்க நன்றாக நடித்திருக்கிறார்.

முக்கிய வேடமேற்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்,தன் அனுபவ நடிப்பின் மூலம் படத்துக்குப் பலமாக இருக்கிறார். சின்னவேடமெனினும் நல்ல வேடமேற்றிருக்கும் விஜிசந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நன்று.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் காதல் நிரம்பி வழிகிறது.அவருக்கு வாய்ப்பாக கதை வெளிநாடுகள் வரை போயிருக்கிறது.அதனால் காட்சி அழகுகள் அதிகம் கிடைத்திருக்கின்றன.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் இரசித்துக் கேட்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன.பின்னணி இசை மூலம் கதைக்குள் இருக்கும் காதலை காண்போர் நெஞ்சுக்குள் இறக்குகிறார்.

ஆண்டனியின் படத்தொகுப்பு, காதலின் முழுமையை உணரச் செய்யும் வண்ணம் காட்சிகளைத் தொகுத்திருக்கிறது.அது சில இடங்களில் பலவீனமாகவும் இருப்பதுதான் முரண்.

சரவணன் வசந்த்தின் கலை இயக்கத்தில் காட்சிகள் மேலும் அழகாகியிருக்கின்றன.

இயக்குநர் விஜய்,எடுத்துக் கொண்ட கதையைக் காட்டிலும் அதற்கு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையைக் காட்டிலும் காட்சிகளை வடிவமைப்பதிலும் அவற்றைச் சுவாரசியமாக இரசிகர்களுக்குக் கொடுப்பதிலும் கைதேர்ந்தவர்.அவருக்கு ஓர் அழகான காதல்கதை அமைந்துவிட்டதால் அதை மிகச்சிறப்பாகச் செய்துவிடுவார் என்கிற எண்ணத்திற்கு ஏமாற்றம் கொடுத்திருக்கிறார்.

அழகான நாயகி, பொருத்தமான நாயகன், தேவைக்கேற்ற துணைநாயகன், அனுபவ நடிகர்கள்,கதை ஸ்காட்லாந்தில் நடக்கிறதா> அங்கேயே போய்ப் படமெடுங்கள் என்று சொல்லும் தயாரிப்பாளர் ஆகிய அவ்வளவும் அமைந்திருக்கிறது.ஆனால், இயக்குநர் விஜய்யின் ஆன்மா விலகிநிற்கிறது.

– அரசன்

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.