மே ஒன்றாம் தேதியே வெளியாகவேண்டிய உத்தமவில்லன் படம் பைனான்சியர்கள் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கிடையேயான பணப்பிரச்சனையால் வெளியாக முடியாமல் போனது. 55 கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படம் ஒரு நாள் தள்ளிப் போனால் என்ன நட்டம்?

அப்படி எதுவும் பெரிய நட்டம் இல்லையென்றாலும் அதை வைத்து பத்திரிக்கைகளும், டி.வி. சேனல்களும் அடித்த கூத்து மக்கள் எவ்வளவு தூரம் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. ஒரு டி.வி.யில் நேற்று நேரடியாக கேமராவுடன் ஒரு தியேட்டர் வாசலில் நின்றபடி தொகுப்பாளர் கேட்கிறார் ‘படம் வெளியாகாதது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?’
அதற்கு ஒரு 45 வயது யூத்து சொன்னது ‘கமல் படம் ஷோவுக்கு காலைலேயே வந்துட்டேன். ஆனால் இன்னும் பொட்டி வரவில்லை.. எங்கள் ஆருயிர் கமல் படம் ரிலீஸாகாவிட்டால் நாங்கள்ளாம் உண்ணாவிரதம் இருக்கப் போறோம்(?!)..’

சத்தமில்லாமல் ‘மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டம்’ என்று டிரைவர்களுக்கும், க்ளீனர்களுக்கும், வொர்க் ஷாப் மெக்கானிக்குகளுக்கும், டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்களுக்கும், மக்களுக்கும் அடுத்த ஆப்பை அரசு வழங்க ரெடியாகியிருக்கும் சூழலில், பெட்ரோல் விலையை திடீர்னு நைட் 12 மணிக்கு பொருளாதாரம் மாறிப்போனதால் 4 ரூபாய் வரை ஏற்றியிருக்கும் சூழலில், இவர்கள் கமல் படம் வரவில்லையே என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் விட தீர்மானிக்கிறார்கள்.

நல்லவேளை.. படம் இன்று ரிலீஸாகி விட்டதாம். பைனான்சியர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சென்னை பிலிம் சேம்பரில் 27 மணி நேர பஞ்சாயத்து நடத்தி பிரச்சனையை சுமுகமாக முடித்து வைத்தவர் நம்ம ‘நாட்டாமை’ சரத்குமார் தானாம். நிஜத்திலும் நாட்டாமையாகிய சரத்குமார் அப்படியே கொஞ்சம் பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்களோட பேசி பஞ்சாயத்து செய்து பெட்ரோல் விலையை குறைப்பாரா ?

Related Images: