ஒரு ‘ஈ’யை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிய கதையாக, இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனம் ஈ;ர்த்திருக்கும் எஸ்.எஸ். ராஜமவுலியின் அடுத்த படத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு நடிகர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
வள்ளுவர் அழைத்தவுடன் வாளியை கிணற்றில் பாதியில் விட்டுவந்த வாசுகியைப்போல், தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படத்தை, அப்படியே விட்டுவிட்டு ராஜமவுலிகாரின் பின்னால் செல்ல அத்தனை நட்சத்திரங்களும் தயாராக இருக்கிறார்கள்.
இவரது அடுத்த ஹீஈரோ என்று இதுவரை தெலுங்கில் இணைத்து எழுதப்பட்டுள்ள அத்தனை காம்பினேஷன்களையும் தொடர்ந்து மறுத்துவரும் ராஜமவுலி, தெலுங்கு படங்கள் இயக்குவதிலிருந்து சின்னதாக ஒரு ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு அடுத்து ஒரு தமிழ்ப்படம் இயக்கவே அதிகம் விரும்புகிறாராம்.
இதை எப்படியோ மோப்பம் பிடித்த உதயநிதி, ராஜமவுலியைத் தொடர்புகொண்டு, ‘’ நான் ஒரே ஒரு படம் நடித்துவிட்டு, அடுத்து ஒரு நல்ல இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் வரை சும்மா இருப்பது என்ற முடிவில் இருக்கிறேன். அந்த அடுத்த இயக்குனர் நீங்களாக இருந்தால், நான் அதிகம் மகிழ்ச்சி அடைவேன். அதே போல் உங்கள் சம்பளம் படத்தின் பட்ஜெட், சக நடிகர்கள், சக டெக்னீஷியன்கள் யார் என்பதை எங்கள் நிறுவனத்துக்கு சொல்லக்கூட வேண்டாம். எல்லாம் உங்கள் மனம் போலவே நடக்கும்’ என்று 70 எம்.எம்.சைஸில் ஒரு ஐஸ் கட்டியை தூக்கி வைத்திருக்கிறாராம்.
இதற்கு பதிலெதுவும் சொல்லாமல் மவுனம் காத்துவந்த வேளையில், ’ அஜீத் உங்களுடன் பேச விரும்புகிறார்’ என்று ஒரு கால் வந்தபோது அதைவாங்கி சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக உற்சாகமாக பேசியிருக்கிறார் ராஜமவுலி.
மற்ற எல்லா காம்பினேஷன்களுக்கும், உடனே உடனே மறுப்பு சொல்லிவரும் ராஜமவுலி, அஜீத்துடன் பேசிய செய்தி குறித்து மட்டும் மவுனம் காக்கிறார் என்றால், இப்போதைக்கு மவுனம் மவுலியின் சம்மதம் என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே?’