– அருண் நெடுஞ்சழியன்

“நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்திய ஆம் ஆத்மியின் வெற்றியை ஜனநாயக சக்திகள் கொண்டாடிவந்த நிலையில்தான், குடியிரிமை திருத்த சட்டதிற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்திய ஷாஹீன் பாக் போராட்டம், வடகிழக்கு தில்லி வன்முறை ஆகிய மைய அரசியல் நிகழ்விலிருந்து விலகி நிற்கிற தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் “கள்ள மௌனம்” கடும் விமர்சனத்திற்குள்ளாகிவருகிறது. தில்லி வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவோடு, கள்ள மௌனம் காத்த தில்லி முதல்வரும் பொறுப்பாளியாகிறார்.

**காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து -370 ஐ ரத்து செய்ததை ஆம் ஆத்மி வரவேற்றது. இதன் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக ஓட்டளித்தது. 370 சட்டப் பிரிவை ரத்து செய்வதால் காஷ்மீர், அமைதியும் வளர்ச்சியும் அடையும் என்றது. காஷ்மீர், தேசிய இன ஒடுக்குமுறை குறித்தெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் தவறான உணர்வுகளுக்கு முரண்படாமல் ஆம் ஆத்மி அதற்கு ஒத்தூதியது.

-உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை ஆம் ஆத்மி வரவேற்றது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்த்திருக்கின்றார் என லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. மண்டல் கமிஷனுக்கு பிந்தைய காலகட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், பட்டியலின சாதிகளுக்கு எதிரான நகரப்புற வர்க்கத்தின் (இட ஒதுக்கீடு எதிர்ப்புஎனும்) தவறான உணர்வுநிலையின் வெளிப்பாடு இது.

-மதம் குறித்த ஆம் ஆத்மியின் நிலைப்பாடு மென் இந்துத்துவ சார்புடையது.அதனால்தான் தேர்தல் நேரத்தில் அனுமன் கோயிலுக்கு சென்று இந்துக்களின் ஓட்டை நழுவ விடாமல் தன்னை மென் இந்துவாக காட்டிக் கொண்டார்.

-மேலும் ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் காவி பாசிஸ்ட்கள் தாக்கியபோதும் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் மற்றும் ஷாகீன் பாக்கில் துப்பாக்கியோடு திரிந்த இந்துத்துவ தீவிரவாதிகள் குறித்தெல்லாம் கள்ள மௌனம் காத்தார்.

*ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் உலகமய காலகட்டத்தில், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் அரசியல் விழுப்புணர்வு எழுச்சியின் விளைவில் உருவானது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், முதலாளித்துவம் தோற்றுவித்த சமூகப் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நகரப்புற நடுத்தர வர்க்கத்தினர், சிறு முதலீட்டாளர்கள், வணிகரகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தின் வர்க்கப் பிரிவினரை ஆம் ஆத்மி அடித்தளமாக கொண்டுள்ளது.

சிவில் சமூகத்தின் பல்வேறு சமூக சக்திகளும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகளாலும் அதன் நாடாளுமன்ற ஆட்சி முறையாலும் அதிருப்தியடைந்துள்ள வர்க்கங்களாக நீடித்தாலும், கல்வியறிவு மற்றும் தகவல் கட்டமைப்பு வசதிகளை எளிதாக பெறுகிற நகர்ப்புற நடுத்தர வர்க்கமே, விரைவாக அரசியல் விழுணர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறது.

***வன்முறையால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதும், வன்முறைக்கு எதிரான சிவில் சமூகம் எதிர்வினையாற்றத் தொடங்கியதும், பாஜகவிற்கு எதிராகவும் அமித் ஷாவிற்கு எதிராக காங்கிரஸ் பேசத் தொடங்கியதும், நீதிமன்றம் தலையீடு செய்யத் தொடங்கியதும், புறநிலைமை முற்றிலும் பாஜகவிற்கு எதிராக திரும்பியதை அடுத்து, தனது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களைக் கொண்டு பாஜகவிற்கு எதிராக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துகிறார். பாஜகவிற்கு எதிரான போக்கை தனக்கு சாதமாக மாற்ற முயல்கிறார். தில்லியில் இராணுவத்தை இறக்க வேண்டும் என அறிக்கை விடுகிறார்.

மாநில முதல்வராக இருந்துகொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருந்ததை நேரடியாக நீதிமன்றம் கண்டித்த பின்னர்தான், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கெஜ்ரிவால் பார்வையிடுகிறார். ஒரு மாநில முதல்வரின் செயலின்மையை நீதிமன்றம் கண்டிக்கிற நிலையை ஏற்படுத்திக் கொண்டது கெஜ்ரிவாலின் சந்தர்ப்பவாத அரசியல் பண்பால் ஏற்பட்ட அவமானகரமான நிலையாகும்.

ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலானது, தனது கட்சியின் சமூக அடித்தளமான நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை முதலாளிய வர்க்க ஆதிக்கத்தோடு ஒத்துப் போக வற்புறுத்துகிறது, ஒன்றுகலந்து வாழக் கோருகிறது. முதலாளித்துவ அரசியல் சாசன ஆட்சியின் மாயைகளில் இருந்து நகர்ப்புற நடத்தற வர்க்கத்தை மீட்காமல் வெகுளித்தனமாக பங்கு கொள்ள வைக்கிறது. சமூக முரண்பாடுகள் கொதிநிலையை எட்டி வெடிக்கிறபோது, ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும் தாமாகவே அம்பலமாகும். தற்போது அம்பலமாகிவருவதைப் போல!

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.