அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது…!

பாரம்பரியமிக்க குழுமத்திலிருந்து வரும் பத்திரிகையை ’’நாயும் நாணும் இந்தப் பிழைப்பு!’’ என்ற தலைப்பிட்டு,’’பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நாய்கள்’’ என்றும், அதன் சிறப்பு கட்டுரையாளர்களை, ’’கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுத தகுதியற்ற மொண்ணைகள்’’என்றும் பொதுவெளியில் நாடறிந்த ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மிகத்தரக் குறைவாக விளாசித் தள்ளுகிறார்.

ஆனால்,இது குறித்த எந்த எதிர்ப்புமின்றி,அந்த பத்திரிக்கை மவுனம் சாதிக்கிறது. வைரமுத்து புகழ்பாடும் கட்டுரைகளை பிரசுரித்தற்கு வந்த எதிர்ப்புகளுக்கு ’’மனமார வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று எதிர்வினையாற்றுவதில் காட்டிய வேகத்தை தன் மீதான இழிவான விமர்சனத்திற்கு உங்களால் வெளிப்படுத்த முடியாமல் போனது ஏன்?

காதில் எதுவுமே விழாதது போன்றும்,கண்ணில் எதுவுமே படாதது போன்றும் எப்படி ஒரு பத்திரிகை நிர்வாகத்தால் இருக்க முடிகிறது….? அப் பத்திரிகையின் அங்கமாகவுள்ள சிறப்பு கட்டுரையாளர்கள் ஆசைத் தம்பியும்,செல்வ புவியரசனும் தாக்கப்பட்டிருப்பது குறித்து அந்த நிர்வாகம் மவுனம் சாதித்தால் – தங்கள் நிர்வாகமே தங்களுக்கு பாதுகாப்பளிக்கத் தவறினால் – நாளைக்கு ஒரு பத்திரிகையாளனுக்கு எந்த ஒரு விஷயத்தையும் எழுதும் துணிச்சல் எப்படி வரும்?

இந்து கேட்டதற்கிணங்கத் தான் எழுத்தாளர் சங்கர சுப்பிரமணியம் கட்டுரை தந்தார்.அவரும் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

’’எங்கள் ஆசிரியர் குழுவினருக்கான தகுதி குறித்து கேள்வி எழுப்ப நீ யார்?’’ ‘’எந்த பத்திரிகை யாரைப் பற்றி எழுதலாம் அல்லது எழுதக் கூடாது என்று தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை உனக்கு யார் கொடுத்தது?’’ என்றெல்லாம் ஜெயமோகனை நோக்கி கேள்வி எழுப்பி இருக்க வேண்டாமா? நியாயப்படி, இந்து தமிழ் திசை அவதூறு வழக்கே தொடுத்திருக்க முடியும்.

இப்படியும் யோசிக்கத் தோன்றுகிறது…! இதே போன்ற ஒரு அவதூறை ஒரு திராவிட இலக்கிய அணியில் உள்ள யாராவது இந்துவை நோக்கி வைத்திருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பார்களா? அல்லது பொங்கி எழுந்திருப்பார்களா? அவர்கள் பொங்கி எழாவிட்டால், அவாள்கள் கூட்டம் பொங்கி அவர்களை கோர்ட்டுக்கு போகவைத்திருக்கும் தானே! சமூகவலைத் தளமெங்கும் சாட்டையெடுத்து சுழற்றி இருக்குமல்லவா அந்த சமூகமே?

பொதுவாக மக்கள் தாங்கள் பாதிக்கப்பட்டால், பத்திரிகைகளின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவாரணம் தேடுவார்கள்.அப்படிப்பட்ட பத்திரிகைகள் தனக்கே ஒரு அவமானம்,அநீதி இழைக்கப்படும் போது எதற்கோ பணிந்து அமைதி காத்தால் பிறகு பத்திரிகைகள் மீதான மக்கள் நம்பிக்கையே தகர்ந்துவிடாதா?

பத்திரிகை துறைக்கான அடிப்படை அறச்சீற்ற மனோபாவம் கூட மழுங்கடிக்கப்படுவதற்கு பின்னணியில் என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது? இதை ஏதோ தனிப்பட்ட இந்து தமிழ் திசைக்கு ஏற்பட்ட அநீதியாகவோ,அவமானமாகவோ பார்க்கமுடியவில்லை!பத்திரிகைதுறையின் சுதந்திரத்திற்கும்,மாண்புக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே பார்க்கிறேன்.

பத்திரிகை துறையை நேசித்து அதில் சுமார் முப்பது ஆண்டுகளாக பணியாறுபவன் என்ற வகையிலும்,என் பத்திரிகையுலக இளம் சகாக்கள் இழிவுபடுத்தப் பட்டிருப்பதையும் காண சகியாமல்தான், நான் இதை எழுத நேர்ந்தது.

ஜனநாயகத்தின் குரல்வளையை எங்கோ கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருந்து கொண்டு ஒரு அதிகாரமையம் ஆட்டுவிப்பதை,இலக்கியத்திற்கு ஒரு தாதா,அரசியலுக்கு ஒரு தாதா,சமூகச் செயல்பாடுகளுக்கு ஒரு தாதா என்று ஆளுக்கு ஆள் அதிகாரமையத்தின் அரவணைப்புடன் எந்தெந்த செய்திகளை,கட்டுரைகளை போடலாம் அல்லது போடக் கூடாது என்று ஆட்டுவிக்கும் போக்கை ஆரம்பத்திலேயே நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்பது தான் நல்லது!

முகநூலில் சாவித்திரிகண்ணன்
மூத்த பத்திரிகையாளர்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.