’ஜெய்பீம்’ தொடர்பான சர்ச்சையில் அநாகரித்தின் உச்சிக்கே சென்றுகொண்டிருக்கும் பா.ம.கவினர் சிலர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் பரிசு என்கிற அளவுக்குப் போயுள்ள நிலையில்தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல்,அஜீத்,விஜய் உள்ளிட்ட அனைவரும் கள்ள மவுனம் காத்து வருகிறார்கள். இந்த மயான மவுனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக தென்னிந்திய திரைப்ப வர்த்தக சமை பா.ம.கவுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 2 அன்று ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னிய சாதியினர் தவறாக சித்திரிக்கப்பட்டதாகக் கூறி சூர்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் வன்னியர் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தமிழ் சினிமா சார்ந்தவர்களிடம் இருந்து தனியாகவோ, அமைப்பு ரீதியாகவோ எந்த ஓர் அறிக்கையும் வெளியிடப்படாமல் மௌனம் சாதித்து வந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அதன் தலைவர் காட்ரகட்ர பிரசாத், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு… நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.
அந்த முத்திரையைப் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்திற்கோ, நடிகருக்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், சாதி, இன, மதசார்பு இன்றி சமூக அக்கறையுடன், ஈகை குணத்துடன் விளிம்புநிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் நடிகர் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற பிரபலங்கள் இனிமேலாவது வாயைத்திறந்து ஏதாவது பேசுகிறார்களா என்று பார்ப்போம்.
தலைப்பு? இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கண்டனம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.