இந்த ஆண்டின் பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் அவார்டை ‘விடுதலை’ பெறும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
The Battle of Algiers போல,
Omar Mukhtar போல
The Pianist போல
தமிழில் இருந்து ஓர் உலகத்தரமான சினிமாவை கொடுத்து இருக்கிறார், வெற்றிமாறன்.
நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் மீண்டும் ஒரு பெருமிதத் தருணத்தை எனக்கு அவர் கொடுத்து இருக்கிறார்.
பச்சை பசேலென ஒரு பாமரக் காதலை காட்டுகிறார் பாருங்கள்… அதுதான் வெற்றிமாறன்; அதுதான் காதலின் அழகியல்!
நடிகர்களை அல்ல கதையை நடிக்க வைக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், வெற்றிமாறன்!
கடவுள் உருவாக்கியதாகச் சொல்லப்படும் மனிதன், அந்தக் கடவுளின் துணை இல்லாமல் தானே இயங்குவதைப் போல, வெற்றிமாறனிடம் இருந்து உதிர்ந்த கரு ஒன்று, அவருடைய துணை இல்லாமல், தானே இயங்கும் உயிரித் தன்மையைப் பெற்று விளங்குகிறது. அதுதான் ‘விடுதலை’ எனும் சினிமாப் பிரதி!
மண்ணையும் மனிதனையும் ஒருசேர இயக்கும் காலத்தையும் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்!
ஓரு சம்பவம், ஒரு சமூகம், ஓர் உலகம், ஒரு கால கட்டம் இவை நெஞ்சை நெகிழ வைக்கும் பதைபதைப்புடன் சொல்லப்படுகின்றன!
இளையராஜா!
என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே! தியேட்டருக்குப் போகும்வரை இளையராஜாவின் பாடல் இசையில் பழுது சொல்லிக் கொண்டே இருந்தேன்.
ஆனால் பாருங்கள் மாயத்தை,
சூரி வாங்கிக் கொடுத்த வலையல்களை பவானி ஸ்ரீ கையில் எடுக்கும்போது ஒலிக்கத் தொடங்குகிறது பாருங்கள் அந்த இசை…..ச்சொச்சொச்சோ…. அட்டகாச உணர்வலைகளை மீட்டிப்போடுகிறார் இளையராஜா….
வழி நெடுக காட்டுமல்லி
யாருமத பாக்கலியே…
உண்மையாகச் சொன்னால், படத்தின் வேகத்துக்கு அந்தப் பாடல் ஒரு தடையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இளையராஜாவோ அந்த இடத்தை நாம் கேட்டுக் களிக்கவும், பார்த்து கிரங்கவுமான ஓர் இலக்கியச் சோலையாக்கிக் கொடுத்து விடுகிறார்.
சினிமாவுக்கு வெளியே நாம் கேட்பது போல அல்ல அந்தப் பாடல். அங்கு அது வேறு ஒரு அழகியலுடன் ஒலிக்கிறது.
அந்தப் பாடல் மட்டும் அல்ல,
சூரியும், பவானிஸ்ரீயும் காட்டுப் பாதைக்குள் நடக்கத் தொடங்கும்போது ஒரு பாடல்.
பவானிஸஸ்ரீயின் பாதத்துக்கு ஒரு குளோசப் வைப்பார் வெற்றிமாறன். அந்த குளோசப்பின் மீது அந்த பாடல் இசை துவங்கும். குதூகலம் என்றால் அதுதான் குதூகலம். அப்படி ஓர் இசைச் சுகம் அது! தியேட்டரே அதிர்கிறது!
இன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே…
பிண்ணி விட்டார் இளையராஜா!
பின்னணி இசையில் இளையராஜா பிழிந்து கொடுக்கும் உணர்ச்சிக் கோவைகள் காட்சியின் வீரியத்தை நமக்குள் கடத்தி விடுகிறது. இந்தப் படத்துக்குள் ஏன் இளையராஜாவை கொண்டு வந்தார் வெற்றிமாறன் என்பதை படம் பார்க்கும்போது புரியும்!
கேமிராவுக்கு முன்னால் சினிமாவுக்கான பாவனைகள் வேண்டாம்; சுயமான உணர்ச்சிகள் மட்டுமே வேண்டும் என்று திட்டமிட்டு இயங்கி இருக்கிறார், வெற்றிமாறன். அது இந்தப் படத்துக்கு ஓர் உயர்ந்த தரத்தைக் கொடுத்து இருக்கிறது.
சூரிக்கு இதுபோல இன்னொரு படம் கிடைக்காது; இதில் செய்திருப்பதைப்போல, இனி இன்னொரு படத்தில் அவரால் நடிக்கவும் முடியாது!
பவானிஶ்ரீ, கேரக்டரோடு அப்படி பொருந்திப் போயிருக்கிறார்!
விஜய் சேதுபதி இந்தப் படத்தில்தான் தனது திறனை உண்மையாக வெளிக்காட்டி இருக்கிறார்!
சினிமா கலப்படமற்ற அசல் உணர்வுகள்; அசல் அசைவுகள், அசல் பார்வைகள், அசல் அச்சம், அசல் கோபம், அசல் தன்னடக்கம், அசல் சுயமரியாதை, அசல் நேர்மை, அசல் காதல்! இவை எல்லாமே பார்வையாளனுக்கு புதிதாகத் தெரிகின்றன!
கதை புதிது,
களம் புதிது,
சம்பவம் புதிது,
கேரக்டர்ஸ் புதிது,
கேரக்டர்களுடைய
நகர்வுகள் புதிது
எமோஷன்ஸ் புதிது,
ரியாக்ஷன்ஸ் புதிது
இவைகளால் இந்தச் சினிமாவே புதிது!
The battle of Algiers பார்த்து விட்டு சினிமாவுக்குள் வந்ததாக, ஒருமுறை சொன்னார் பா.ரஞ்சித். ஆனால், இன்றைக்கு, அதைவிடவும் மேலான ஒரு மக்கள் சினிமாவை வெற்றிமாறன் கொடுத்து விட்டார்! உலக சினிமா சரித்திரம் அவரை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு இருக்கிறது!
சினிமா ரசனையை உயர்த்துகிறது விடுதலை.
ஒரு சினிமாவை இனி எப்படி அணுக வேண்டும் எனும் மன மாற்றத்தை தமிழ் ரசிகனுக்குள் செலுத்துகிறார், வெற்றிமாறன். தமிழ்ச் சினிமா இலக்கிய தரத்தை எட்டிவிட்டதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது விடுதலை!
உயர்தரமான ஒளிப்பதிவு நம்மை வாயபிளக்கச் செய்கிறது. எல்லாம் கச்சிதமாக வந்து போகின்றன.
ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை, ஆர்ட் வொர்க் எல்லாமே ஒன்றிணைந்து வெளிப்பட்டு இருக்கின்றன. எந்த ஒரு நல்ல படைப்பிலும் இந்த ஒன்றிணைவைப் பார்க்கலாம்!
புதியவர்கள் நிறையக் கற்றுக் கொள்ளலாம்!
வாழ்த்துக்கள் வெற்றிமாறன் & டீம்!
ம.தொல்காப்பியன்
— நன்றி. முகநூலில் ம.தொல்காப்பியன்.